? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தானி 6:16-23

சோதனைகளிலிருந்து தப்புவிக்கிறவர்!

…நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் தானியேல் 6:16

“கடவுளோடு அதிகம் நெருங்கி ஜீவிக்க விரும்பவில்லை” என்று கூறியவரிடம் காரணம் கேட்டபோது, “கிறிஸ்துவோடு அதிகம் நெருங்கி ஜீவிக்கும்போது அதிக பாடுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது” என்றார். கிறிஸ்தவ வாழ்க்கை பாடுகள் நிறைந்த வாழ்க்கை என்பது உண்மைதான். ஆனால், பாடுகள் இல்லையேல் பரமனின் அன்பையும், மகிமையையும், பிரசன்னத்தையும், அவர் அருளும் தெய்வீக ஆறுதலையும் அனுபவிக்க முடியாது என்பதை அந்தச் சகோதரியால் ஏற்கமுடியவில்லை. இன்று நமது மனநிலை எப்படி இருக்கிறது? எத்தனை பாடுகளைச் சந்திக்க நேர்ந்தாலும், மரணமே வந்தாலும்கூட கர்த்தராகிய ஆண்டவரைத் தொழுதுகொள்வதை தவிர்ப்பதுமில்லை, அவரைத் தவிர வேறு யார் முன்னிலையிலும் மண்டியிடுவதுமில்லை என்ற தீர்மானத்தில்  அன்று தானியேல் உறுதியாயிருந்தார். மனிதக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து மனிதரைத் திருப்திப்படுத்துவதைப் பார்க்கிலும், தான் நம்பியிருந்த தேவனைத் திருப்திப்படுத்துவதில் வைராக்கியமாகவே இருந்தார். இப்படி, கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டியதானியேலின் விசுவாசம் எத்தனை ஆழமானது. இந்த உறுதியோடு ஜீவித்திருந்த தானியேலுக்கு சோதனைகள் வரத்தான் செய்தது. அவரை எப்படியாகிலும் சிக்க வைத்து, அவரது உயர்வுக்கும் உயிருக்கும் உலைவைக்கத் தீர்மானித்தார்கள் அவரதுஎதிராளிகள். ஆனாலும் அவர்களின் சூழ்ச்சிக்கு அவர் சற்றும் பயப்படவில்லை. தான் ஆராதிக்கும் தேவன் இன்னார் என்பதை தானியேல் அறிந்திருந்தார். சிங்கங்களின் குகையிலும் கர்த்தர் தானியேலுடன் கூடவே இருந்தார். தானியேல் கர்த்தர் ஒருவரையே கனம்பண்ணினார், கர்த்தரும் அவரைக் கனம்பண்ணினார்.

நாம் கர்த்தருக்காக, கர்த்தருடைய வார்த்தையினிமித்தம் வைராக்கியம் காட்டும் போது, நிச்சயம் இந்த உலகம் அதை ஏற்றுக்கொள்ளாது. நமது சொந்தங்களே நம்மை எதிர்க்கவும் நேரிடும். “சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பான மனுபுத்திரனுக்கும் பயப்படுகிதற்கும், வானங்களை விரித்து. பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?” (ஏசா.51:12). அன்று இஸ்ரவேலைப் பார்த்துக் கேட்ட கேள்வியை இன்று கர்த்தர் நம்மைப் பார்த்துக் கேட்கிறார். கர்த்தர் அறியாமல் நமது தலையிலுள்ள ஒரு முடிகூட விழாது என்று கர்த்தர் சொல்லியிருக்க, மனிதருக்கு நாம் ஏன் பயப்படவேண்டும்? சத்துரு என்னைத் தொடும் போது அவன் ஜீவனுள்ள கர்த்தரின் கண்மணியைத் தொட எத்தனிக்கிறான் என்பதை நாம் மறக்கக்கூடாது. எந்த நிலையிலும் நாம் கர்த்தரை விடாமல் பற்றியிருப்போமானால், கர்த்தரும் நம்மைக் கைவிடவேமாட்டார். பாடுகள், சோதனைகள் நேரம்தான் நமது மனஉறுதியை வெளிப்படுத்தும் நேரம்.

? இன்றைய சிந்தனைக்கு: 

  நாட்டின் நெருக்கடிகளும், வீட்டின் கலக்கங்களும் என்னை தடுமாற வைத்தாலும், கர்த்தருக்குள் என்னால் உறுதியாக நிற்க முடிகிறதா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin