? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:13-22

இருளில் பிரகாசிக்கும் தீபம்

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ  அறியாதிருக்கிறதுபோலவே …தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.  பிரசங்கி 11:5

உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனும், சகலவிதமான ஆசீர்வாதங்களும், ஐசுவரியங்களும் நிறைந்தவனுமாயிருந்த யோபுவின் வாழ்க்கையில், சடுதியாக, ஒன்றன்பின் ஒன்றாக இழப்பும், நோயும், துன்பங்களும் வரத்தொடங்கின. “கர்த்தருக்குப் பயந்து, அவர் சித்தத்தின் பாதையிலேயே நடந்த என் வாழ்க்கையில் ஏன் இத்தனை சோகம்? தேவன் என்னைக் கைவிட்டாரா? எனக்கு ஏன் இந்த அவல நிலை?” என்றெல்லாம் இந்த மனிதனின் உள்ளம் தவித்திருக்கலாம். ஆனாலும் அவர் தேவனை குறைசொல்லவுமில்லை, தூஷிக்கவுமில்லை. அவிசுவாசம்  உள்ளத்தை ஆட்கொள்ள இடமளிக்கவுமில்லை. மாறாக, “இதோ, நான் முன்னாகப் போனாலும் அவர் இல்லை; பின்னாகப் போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன், வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளிந்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்… எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்” (யோபு 23:8-10,14) என்று கூறி, கர்த்தருக்குள் தன் அனைத்து வேதனைகளையும் பொறுமையோடு சகித்துக்கொண்டிருந்தார். நாட்கள் நகர்ந்தன. வேளை வந்தபோது அவரை மூடியிருந்த இருள் மறைந்தது. பிரகாசமான ஒளி முன்னரைவிட பலமடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. இழந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இரட்டிப்பாகப் பெற்றுக்கொண்டார்.

காரிருள் சூழ்ந்துவருவதுபோல இந்த நாட்களில் நம்மைச் சுற்றிலும் பல இக்கட்டுகள் நெருக்கி நிற்கின்றன. நாட்டின் நிலைமைகளை விபரிக்க வார்த்தையே இல்லை. இதனால் குடும்பங்களில் பலவித குழப்பநிலைகள்! ஒரு ஆங்கில ஆசிரியர் இரண்டாம் வகுப்பு மாணவருக்கு உணவு வேளைகளுக்கான ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொடுத்துவிட்டு, இன்று உன் வீட்டிலே காலை உணவு என்ன சாப்பிட்டீர்கள் என்று ஒரு மாணவனிடம் கேட்க, அவன் சொன்ன பதில், “வெறும் தேனீர் மாத்திரமே” என்று சொல்லியிருக்கிறான். இது நடந்த உண்மை சம்பவம்.

யோபுவுக்கு நிகழ்ந்ததுபோலவே நமக்கும் நிகழவேண்டும் என்பது அல்ல; ஆனால், உணர்வுகள் ஒன்றுதான். இன்று நாம் இருள்சூழ்ந்த ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுள் ளோம். ஆனாலும், இருளின் மத்தியில்தான், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று சொல்லி வெளிச்சத்தைப் பிரகாசிப்பிக்கச் செய்த தேவன் இன்னமும் நம்முடனேதான் இருக்கிறார். “அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்” (யோபு 29:3) என்றார் யோபு. இருள் சூழ்ந்த லோகத்தில், இமைப்பொழுதும் தூங்காமல், கண்மணிபோல நம்மைக் காக்கும் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் என்ற தைரியத்துடன் முன்செல்லுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு: 

  கர்த்தருடைய வார்த்தை காரிருளிலும் நம்மை நடத்தும் என்பதை விசுவாசித்து, அதன் பாதையில் என்னால் நடக்கமுடிகிறதா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin