? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1 இராஜாக்கள் 17:10-16

ஒருபோதும் குறைவுபடாது!

ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா. 1இராஜாக்கள் 17:13

அவள் ஒரு விதவைத் தாய். தேசமெங்கும் கொடிய பஞ்சம்; எங்குமே உணவு இல்லை. இத் தாயிடம் எஞ்சியிருந்ததோ ஒரு பிடி மாவும், சிறிதளவு எண்ணெயும்தான். வாழ்வுக்கு இனி நம்பிக்கை இல்லை என்ற நிலையில், அந்த மாவில் அப்பத்தைச் சுட்டுதானும் தன் பிள்ளையும் சாப்பிட்டு இறந்துபோகலாம் என்று நினைத்து, அப்பம் சுடுவதற்காக இரண்டு விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள் இவள். இந்த விதவையை நோக்கி, எலியா வருகிறார். வந்தவர் அவளிடம் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார். அவள் அதைக்கொண்டுவரப்போகிறபோது, அப்பமும் கொண்டுவரும்படி கூறுகிறார். அவளிடம் இருந்ததோ கொஞ்சம்; என்றாலும், சுடுகிற அப்பத்தில் முதல் தனக்குத் தரும் படி கேட்கிறார் கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியான எலியா. அந்தத் தாயும், தன்னிடம் இருப்பதிலும் முதலில் தேவஊழியனுக்குக் கொடுக்க முன்வந்தாள். நடந்தது என்ன? பஞ்சம் தீரும்வரை அவள் பாத்திரத்தில் மா தீர்ந்து போகவும் இல்லை. அவள் கலசத்தில் எண்ணை குறைந்துபோகவுமில்லை.

இந்நாட்களில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அது கரைந்துபோகிறது. பொருளாதார பிரச்சனையில் அகப்பட்டிருக்கும் நமது நாட்டில், விலைவாசி அதிகரித்ததால் மக்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். ஆனாலும், “கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது” என்ற கர்த்தருடைய வார்த்தை பொய்க்குமா? அப்படி யானால் ஏன் இந்த குறைவு? முதலாவதாக, கர்த்தர் நம்மைப் பராமரிப்பார் என்ற தைரியத்தில், ஊதாரித்தனமாக செலவுசெய்துவிட்டு, “என் வாழ்வில் ஏன் இந்த குறைவு?”என்று கர்த்தரை குறைசொல்வது தவறு. இரண்டாவதாக, நாம் கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுப்பதில் விழிப்புடன் செயற்படுகிறோமா?

நாம் எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பது நமது குறைவுக்கான முக்கிய காரணமாக இருக்கலாம். நமது வருமானத்தில் செலவுகளுக்காக எடுத்து வைத்துவிட்டு, மிகுதியில் கொஞ்சத்தைக் கர்த்தருக்கென்று கொடுக்கிறோமா? அல்லது, முதலாவது கர்த்தருக்கென எடுத்துவைத்துவிட்டு, மீதி வருமானத்தைப் பங்கிட்டு செலவிடுகிறோமா? மல்கியா 3:10, நாம் அவருக்குக் கொடுக்கவேண்டிய பங்கைக் கொடுக்கும்போது, கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். அதற்காக கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு கொடுக்கக்கூடாது. மாறாக, மனமகிழ்ச்சியுடன் கொடுக்கும்போது கர்த்தரும் நம்மில் மகிழ்ந்திருப்பார். கர்த்தர் நமக்குத் தந்திருப்பவற்றை கர்த்தருக்குப் பிரியமாக, உக்கிராணத்துவத்துடன் செலவுசெய்வோம். முதலாவது, நம்மையும். நமக்கென்று இருப்பவற்றையும் கர்த்தருக்குக் கொடுப்போம். நிச்சயமாகவே நமக்கு குறைவு வராது; குறைவிலும் நிறைவுகாண கர்த்தர் நம்மை நிரப்புவார்.

? இன்றைய சிந்தனைக்கு:  

வாழ்வின் எந்த நிலையிலும், கர்த்தருக்கென்றே முதலிடம் கொடுத்து, கிடைப்பதில் அல்லது உள்ளதில் அவருடைய ஊழியத்துக் கென்று முதலில் கொடுக்க என்னால் முடியுமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin