இ.வஷ்னி ஏனர்ஸ்ட்
நன்றி : சத்தியவசனம் சஞ்சிகை. இலங்கை

நான் ஆண்டவருக்காக ஊழியம் செய்ய விரும்புகிறேன், எனது வீட்டினை ஆண்டவருக்காக பயன்படுத்த விரும்புகிறேன், சபையில் பல நபர்களுக்கு முன்பாக, பாடல்கள் பாட விரும்புகிறேன், இசைக் கருவிகளை வாசிக்க விரும்புகிறேன், பிரசங்கம் பண்ண விரும்புகிறேன்… என தாலந்து பெற்ற பலர் எதையாகிலும் ஆண்டவருக்காக செய்ய வேண்டும் என வாஞ்சிப்பதுண்டு. அதில் எவ்வித தவறுமில்லைதான்.

ஆயினும், சாதிக்க வேண்டும், என்ற வாஞ்சையுள்ள நபர்களிடத்தில், ஆண்டவரின் மகிமை தன்னில் காணப்பட வேண்டுமென்ற சிந்தனையும் பரிசுத்தமும் வெகு குறைவாயிருப்பதை தேவன் விரும்புவதில்லையே.

உன் தனிப்பட்ட வாழ்வில் தேவன் மகிமைப்படுவாரா?

ஆண்டவருக்காக பல அரிய சாதனைகளைச் செய்தாலும், உன் வாழ்க்கையில் நீ அவருக்கு கொடுத்த முதலிடத்தைக் குறித்தே தேவன் மகிமைப்படுவார். நம்முடைய திறமை, தாலந்து, ஆற்றல், தேவ பக்தி, ஜெபிக்கும் வாஞ்சை, சாதிக்கும் வல்லமை ஆகியவற்றை சரியான விதத்தில் பயன்படுத்தி, தேவனுடைய நாம மகிமைக்காக உபயோகித்தால் மாத்திரமே மிகப் பெரிய காரியங்களை உன்னால் செய்ய முடியும். இவை எல்லா வற்றையும்விட, தேவன் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையே கவனித்துப் பார்க்கின்றார்.

சாலொமோன் ராஜா, தனது காலத்தில், மகா பரிசுத்தமான ஆலயத்தைக் காட்டினான் (2நாளா 3:8) அந்த பிரமாண்ட ஆலயத்தை பிரதிஷ்டையும் செய்தான். அத்துடன், தனது ராஜரிகத்திற்கு ஒரு அரண்மனையையும் கட்டினான். அவன் சாதித்த விஷயங்களில், எவ்வித தவறுமில்லை தான். தேவாலயத்தில் கர்த்தருடைய மகிமை விளங்கியபோதிலும், அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் தேவ நாமம் மகிமைப்படவில்லை, கர்த்தருடைய நாமம் தனது குடும்பத்தில், தனது அந்தரங்க வாழ்வில் மகிமைப்படவேண்டும், தனது ஜீவியத்தில் காணப்பட வேண்டுமென்ற எண்ணம் சாலொமோனிடம் காணப்படாதது பரிதாபத்திற்குரியதே. அதனால் அவனது வாழ்க்கையில் தேவ மகிமை வெளிப்படவில்லை.

தேவ மகிமையை காணாமல் நாம் வாழலாமா?

பிரமாண்டமான தேவாலயம் கட்டப்பட்ட போதிலும், தேவ மகிமை அங்கே வெளிப்பட்ட போதிலும், தேவமகிமை தொடர்ந்தும் தங்கியிருக்கும் இடமாக அது தொடரவில்லை. காரணம், ஜனங்களின் வாழ்வில் தேவன் மகிமைப்படாத காரணத்தினால், அந்த ஆலயத்தை இடித்துப்போடு வதற்கான ஏற்பாடுகளை தேவனே செய்தார்.

இந்நாட்களில், தேவ மகிமைக்காக எனக்கூறி, பலர் கட்டிடங்களைக் கட்டுகின்றனர். சபைகளில் பல காரியங்களை முன்னேடுக்கின்றனர். வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றனர். பாடல்களை பாடுகின்றனர். புத்தகங்களை வெளியிடுகின்றனர். புது பாடல்களை எழுதுகின்றனர். எல்லாமே நல்லது தான். ஆனால்…

அவர்களில் பலருடைய வாழ்க்கையில் தேவன் மகிமைப்படும் விதமான ஜீவியம் இல்லையே. நாம் இப்படி வாழலாமா? கூடாதே.

சபை என்பது கட்டிடமல்ல; அது மக்கள் ஒன்று கூடும் இடமாகும். மக்கள் தமது வாழ்க்கை மூலமாகவே கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டும். அவரது நாமத்தை பிரஸ்தாபப்படுத்த வேண்டும். இந்த உணர்வோடு நாம் கர்த்தருக்காக பிரயாசப்பட வேண்டும். அவருக்குப் பிரியமான விதத்தில், வாழ கரிசனையெடுக்க வேண்டும். மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

நமது ஜெபத்தில், உபவாசத்தில், விழிப்பாராதனைகளில், பாடல் நேரங்களில், பிரசங்கத்தில், தேவனுக்கு முதலிடம் கொடுக்கின்ற உணர்வுடன் இருக்க கவனம் செலுத்த வேண்டும்.

பரிசுத்தம் இல்லாவிட்டால். . .?

ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும், தன் வாழ்வை நஷ்டப்படுத்தினால் என்ன பயன்? சாலொமோன் அழகான மகிமையான ஆலயத்தைக் கட்டினாலும், அது நிலைத்து நிற்கப் போவதில்லை.

தனது ஜீவியத்தை கன்மலையாகிய தேவன் மீது கட்டியிருந்தால், அவனது ஆத்துமா நஷ்டப்பட்டிருக்காது அல்லவா. கர்த்தருக்காக நம்மால் என்ன செய்ய முடிகின்றது? என்ற கேள்வி கேட்கின்ற தேவ பிள்ளையே, நம்முடைய வாழ்வில் கர்த்தரால் என்ன செய்ய முடிகின்றது என்பதே ஒரு நிமிடம் அலசி ஆராய வேண்டிய ஒன்றாயுள்ளது.

நமது சபையின் பெருமையோ, அங்கத்துவமோ, ஒன்றுகூடலோ நம்மை பரலோகம் கொண்டு செல்லாது. நீ விடியவிடிய ஜெபிக்கலாம், எலியாவைப்போல வல்லமையாக பேசலாம். ஆனால் உனது வாழ்க்கையில் எலியாவிடம் காணப்பட்ட பரிசுத்தத்தை வாஞ்சிக்கிற தன்மை இல்லாவிட்டால் பயனில்லை.

நீ தாவீதைப்போல ஆடிஆடி நடனமாடி ஆராதிக்கலாம். ஆனால், கர்த்தரை உனக்கு முன்பாக மேய்ப்பனாக வைத்திருக்கும் தாவீதிடம் காணப்பட்ட விசுவாசம் இல்லாவிட்டால் பயனில்லை. பவுலைப் போல ஓடி ஓடி பல நாடுகளில் நற்செய்தி அறிவிக்கலாம். ஆனால், பொன்னையும் வெள்ளியையும் இச்சிக்காத பவுலைப்போல மாறாவிட்டால் பயனில்லை.

நீ அன்னாளைப்போல அழுதுஅழுது ஜெபித்து ஆசீர்வாதங்களை கேட்கலாம். ஆனால், சுயஆசைகளை தேவபாதத்தில் அர்ப்பணித்து தனது மகனையே அவருக்காக அர்ப்பணித்த அன்னாளைப்போல மாறாவிட்டால் பிரயோஜனமில்லை.

“உன் மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசாயா 60:2) என்ற தீர்க்கதரிசன வார்த்தை உன்னில் நிறைவேற நீ செய்யவேண்டியது என்ன என்பதை சிந்திப்பாயா?

ஆபிரகாமில் தேவ மகிமை!

அன்று, ஆபிரகாம் தேவனுக்காக ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டவில்லை. சாலோமோனைப் போல பிரமாண்டமான அலங்காரங்களை உருவாக்கவில்லை. தானியேலைப்போல உயர் பதவியில் இருக்கவில்லை. தாவீதைப்போல ஒரு நாட்டை ஆளவில்லை. மோசேயைப்போல பெரிய விடுதலை இயக்கங்களை முன்னெடுக்கவில்லை. எஸ்றா நெகேமியாவைப்போல தேசங்களுக்காக ஜெபிக்கவில்லை. அவன் செய்ததெல்லாம், கர்த்தர் எதையெல்லாம் செய்ய சொன்னாரோ, அதையெல்லாம் தயங்காமல் கீழ்ப்படிவோடு செய்தான். தனது மகனையே அவருக்காக இழக்க அவன் பின்நிற்கவில்லை. அதனால்தான், கர்த்தர், நான் ஆபிரகாமின் தேவன் (யாத் 3:15, மாற்கு 12:26) என்று கூற வெட்கப்படவில்லை.

ஆபிரகாம் பெரிய சாதனைகளை செய்ததாக தெரியவில்லை. ஆனால் அவன் தேவனை விசுவாசித்தான். தமது சொந்த ஜீவியத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியபடியெல்லாம் வாழ விரும்பினான்.

கீழ்ப்படிதல், தாழ்மை, உண்மை, அர்ப்பணிப்பு, விசுவாசம், தேவன் மீது அன்பு, முன்மாதிரியான வாழ்க்கை ஆகிய குணாதிசயங்கள் மாத்திரமே அவனிடம் காணப்பட்டது. அவையே அவனை மிகப்பெரிய மனிதனாக மாற்றியது. அவனது வாழ்வில் வரங்கள் அல்ல, கனிகளே செழித்தோங்கியிருந்தது.

இன்று அநேகர் தாலந்துகளை, வரங்களை, அற்புதங்களை நாடி ஓடுகின்றார்கள். பெரிய கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு தமது நன்கொடைகளை அனுப்பி, அவர்களுடைய பங்காளர் திட்டங்களிலே இணைய விரும்புகின்றார்கள். பெரிய சபைகளிலே ஆராதிக்க, விரும்புகின்றார்கள். பெரிய சபைகளிலே, தாம் அமருவதற்கு ஒரு ஆசனத்தைத் தேடுகின்றார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் தேவனுக்கேற்ற குணாதிசயங்கள் இல்லாவிட்டால், நற்பண்புகள் இல்லாவிட்டால் தேவன் அவர்களில் மகிமைப்படமாட்டாரே.

யோபுவில் தேவ மகிமை!

யோபு தனது சொத்துக்களைவிட, தனது பிள்ளைகளைவிட, ஏன் தனது மனைவியையும் விட தேவனுக்கு முதலிடம் கொடுத்தான். எவ்வளவு சேதம் நேரிட்டாலும், தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும்விதத்தில் வாழ்ந்தான். அவன் தனது வாயினால் எந்த பாவமும் செய்யவில்லை. அவ்வாறான வாழ்க்கையை நீ வாழும்போது, தேவனது மகிமை உனது வாழ்வில் காணப்படுவது உறுதி.

உனது வாழ்வில், தேவன் விரும்புகின்ற ஆவியின் கனியான அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (கலா 5:22) ஆகியவைக் காணப்படுமேயாயின், உன்னில் தேவமகிமை காணப்படுமல்லவா?

சங்கீதக்காரன் கண்ட தேவ மகிமை!

பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன் (சங்.63:2) என சங்கீதக்காரன் கூறுகிறான். ஆம், ஞானமும் வல்லமையும் தேவமகிமையாக இருந்தபோதிலும், தேவன் தமது பரிசுத்தத்தினாலும் வல்லமையினாலும் நீதி நியாயத்தினாலும் தமது மகிமையின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறார் (ஏசா 6:3, எண். 14:22, எசே 39:21, சங் 29:3).

கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார் (சங்.104:31). நாம் அவரது கிரியைகளாக அவரது மகிமையை வெளிப்படுத்துகின்றோமா?

அன்று, மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப் பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக் கூடாதிருந்தார்களே (2கொரி 3:7).

இன்று நமது நிலை என்ன? நாமும் தேவ னுடைய சாயலை மகிமையை தரித்திருக்க வேண்டுமல்லவா?

அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்களா?

பரிசுத்தவான்களாக அழைக்கப்பட்டுள்ள நாமும் குணமாக்கப்பட்டு தேவமகிமையைப் பெற்று விசுவாசத்தினாலே இந்த கிருபையை மேன்மை பாராட்டி, நீதிமான்களாக்கப்பட்டு, மறுரூபமாக வேண்டியவர்களாக இருக்கின்றோம். (ரோமர் 3:23, 5:2, 8:18,30, 2கொரி 3:18, 4:6, பிலி 3:21, கொலோ 3:4). நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்களா?

உனது வாழ்வில், உனது தாலந்தோ, திறமையோ, வரமோ உன்னை பரலோகம் கொண்டுபோய் சேர்க்காது. உனது சபை அங்கத்துவமோ, பங்காளர் திட்டமோ, ஒன்று கூடலோ, நாடகமோ, பாடல்களோ, ஆராதனையோ, பிரசங்கமோ, திருவிருந்தோ உன்னை பரலோகம் கொண்டுபோய் சேர்க்காது. உனது வாழ்வில் தேவனுக்கு நீ முதலிடம் கொடுத்து இவைகளையும் விட்டுவிடாமல் இருக்கும்போது, தேவன் எதிர்பார்க்கின்ற கீழ்ப்படிவும் தாழ்மையும் உண்மையும் விசுவாசமும் அர்ப்பணிப்பும் உன்னில் பெருகும்போது, நிச்சயமாக உன்னில் தேவமகிமை காணப்படும்.

ஆகவே, பிரியமானவர்களே, தேவனுக்காக சாதிக்க விரும்புகின்றீர்களா? நல்லதுதான். தேவனுக்காக உங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள் (ரோமர் 12:1). உங்கள் வாழ்வில் பரிசுத்த ஜீவியத்தை, தேவனுடைய மகிமையை வென்றெடுங்கள்! அது ஒன்றே என்றென்றும் கனத்திற்குரியது. மேன்மையானது. நினைவுகூரத்தக்கது!

நன்றி : சத்தியவசனம் சஞ்சிகை. இலங்கை

Solverwp- WordPress Theme and Plugin