? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 3:8-14

மனந்திரும்புதலின் மாற்றங்கள்

பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடு…உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிரு… எனக்கு உகந்த உபவாசம். ஏசா.58:7

பட்டினியால் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தின் தாயாரை அவதானித்த ஒருவர் வீடு தேடி வந்து ஒரு உணவுப் பொதியைக் கொடுத்தார். கண்ணீர்மல்க நன்றி சொன்ன அந்தத் தாயார், அதை எடுத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடினார். திகைத்துப்போய் நின்ற கொடையாளர், திரும்பி வந்த தாயிடம், எங்கே போனீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய், ‘அடுத்த வீட்டிலும் குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள். அதுதான் எனக்கு நீங்கள் கொடுத்ததில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்றாள். இப்படிப் பல காட்சிகளை நானே கண்டிருக்கிறேன்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ‘நான்” என்று தனித்து வாழும் வாழ்வு அல்ல; பிறருடன் ஐக்கியமாக வாழும் வாழ்வே அது. பிறரை நேசித்து, குறைவுள்ளவர்களை விசாரித்து,என்னில் அன்புகூருவதுபோல பிறரிலும் அன்புகூரும் வாழ்வே அது. இயல்பாக நாம் எப்படிப்பட்ட குணாதிசயம் உள்ளவர்களாக இருந்தாலும், மனந்திரும்பி இரட்சிப்படைந்து வாழ்வு மாறும்போது மெதுமெதுவாக இந்த மாற்றங்கள் நமக்குள் உருவாவது திண்ணம்.

இதனையே, ஆண்டவராகிய இயேசு ‘உன்னைப்போல உன் அயலானையும் நேசி” என்ற கற்பனையாக மனித மனங்களில் பதியவைத்தார். இந்த பிறர் சிநேகம் என்பது கல்வி அறிவினால் உருவாகாது; மாறாக, கல்லான இதயம் மாற்றமடையும்போது உருவாகிறது. ஒவ்வொரு விசுவாசியினதும் மனமாற்றத்தின் ஒரு பகுதி இது.

இந்த அன்பின் அடிப்படையில்தான் யோவான் ஸ்நானன் தன்னைச் சந்திக்க வந்த வேறுபட்ட மக்களுக்கும் அவரவருக்கேற்ற ஆலோசனைகளை வழங்கினான். வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கவேண்டுமென்றும், ஆயக்காரரிடம் மேலதிக பணத்தை லஞ்சமாகப்பெற்று உங்களையும் மற்றவர்களையும் வஞ்சிக்கவேண்டாம் என்றும், போர்ச்சேவகரிடம் உங்கள் அதிகாரங்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை துன்பபடுத்தாமலும் பொய்க்குற்றஞ் சாட்டாமலும் வருமானம் ஒன்றே போதுமென வாழவேண்டுமென்றும் யோவான் கூறினான். இவைகள்தான் மனந்திரும்புதலில் ஏற்படும் மாற்றங்களின் அடையாளங்கள். இயேசு சொன்ன நல்ல சமாரியன் உவமையும், பலன் கருதாமல் பிறரில் காண்பிக்கவேண்டிய அன்பையே ஆண்டவர் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார். இரட்சிக்கப்பட்டோம் என்று சொல்லுகின்ற நமது வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன? இன்னமும் நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறோமா? பிறர் தேவைகளுக்கு நாம் குருடராக இருக்கிறோமா? அல்லது ஆண்டவருடைய கட்டளையை நிறைவேற்றுகிறோமா? மனந்திரும்புகிற ஒவ்வொரு பாவியும் இயேசுவின் அன்பை நிச்சயம் தன்னில் வெளிப்படுத்துவான்.

? இன்றைய சிந்தனைக்கு:  ‘அந்நியனான என்னில் இயேசு காட்டிய அன்பும் கரிசனையும் இன்று என்னில் வெளிப்படுகிறதா என்பதைச் சிந்தித்து, என் இரட்சிப்பைக் குறித்துச் சிந்திப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin