? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 119:33-40

இரண்டு கண்ணாடிகள்

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங்கீதம்  119:37

‘நிலைக்கண்ணாடியின் முன்நின்று, தனது முகத்தைப் பார்த்து ரசிப்பதிலும், தலை மயிரை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி சரிசெய்து தன்னைத் தானே பார்ப்பதிலும் பல மணித்தியாலத்தை மகன் செலவிடுவான். இது கூடாது என்று சொன்னாலும் கேட்கமாட்டான். என் மகளிலும்பார்க்க இவனே கண்ணாடி முன்பாக அதிகமாக நிற்பான்.

இன்று அவன் நிலை மிகுந்த துக்கத்துக்குரியதாக இருக்கிறது. கண்ணாடி காட்டுகின்ற தன் முக அழகை இரசித்த நேரத்தில், வேதாகமம் காட்டும் உள்ளான அழகை இவன் கண்டிருந்தால் இவன் வாழ்வு பாதுகாக்கப்பட்டிருக்குமே” என்று ஒரு தகப்பனார் நிலைகுலைந்த மகனுடைய வாழ்வை எண்ணிக் கண்ணீர்விட்டார். ஆம், நிலைக்கண்ணாடி ஒருவரின் வெளித்தோற்றத்தின் நிலையையே காட்டும்; ஆனால் நமது உள்ளான மனுஷனின் நமது ஆத்துமாவின் நிலையை அது காட்டாது. அதற்கு பரிசுத்த வேதாகமம் என்ற கண்ணாடியே அவசியம்.

இந்த வேத வாக்கியம் எப்படி நமது உள்ளான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பதை அதே வாக்கியமே நமக்கு விளக்குகிறது. ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளை யும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி.4:12). கண்ணாடி காட்டும் முகம், நாளைமாறிப்போய், முதுமை நிலையடையும். ஆனால் தேவனுடைய வார்த்தை என்ற கண்ணாடியோ என்றும் அழியாத நமது ஆத்துமாவைப் பிரதிபலிக்கிறது. இந்த வார்த்தைக்கு முன்நின்று நமது வாழ்வைப் பார்ப்போமென்றால் நமது உண்மைநிலை தெரியும். சரிசெய்ய வேண்டிய காரியங்கள் தெரியும். அதனால்தானே என்னவோ இந்த வார்த்தை என்ற கண்ணாடிக்கு முன்பாக நிற்பதற்குப் பலர் விரும்புவதில்லை.

‘அந்தப் பட்டணத்தார் (பெரேயா) மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால் …நற்குணசாலிகளாயி ருந்தார்கள்” (அப்.17:11).

நமது வெளி அழகு முக்கியமா? நற்குணசாலிகளாக இயேசுவைத் தரித்துக்கொள்வது முக்கியமா? நமது பாவநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்ற வேவாக்கியம் என்ற கண்ணாடி முன்பாக தினமும் உட்காருவோமாக. இன்று நாம் எந்தக் கண்ணாடி முன்னால் அதிக நேரம் செலவழிக்கிறோம் என்பதை நமது வாழ்வே எடுத்துக்காட்டும். நமக்கு நித்தியஜீவன் உண்டாயிருக்க (யோவான் 5:39) வேதவாக்கியங்களைப் பற்றிப் பிடிப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு: 

நிலைக்கண்ணாடி அவசியந்தான். ஆனால் பரிசுத்த வேதாகமம் என்ற கண்ணாடியின் அவசியத்தை உணர்ந்திருக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin