? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 102:1-27

கர்த்தரையே நோக்குவோம்!

நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். சங்கீதம் 91:2

இயேசு ஒரு உவமையைக் கூறினார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவ ஆலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் முதலில் தான் இந்த ஆயக்காரன்போல இராததற்காக கடவுளுக்கு நன்றிசொல்கிறான். சொல்லிவிட்டு தான் உபவாசம் செய்வதாகவும், சகல சம்பாத்தியத்திலும் தசம பாகம் செலுத்துவதாகவும் தற்புகழ் கூறுகிறான். அவனது ஜெபம் சுயபுகழை வெளிப்படுத்தியது. ஆனால் ஆயக்காரனோ தூரத்தில் நின்று, தன் கண்களையும் மேல்நோக்க துணியாமல், மார்பிலே அடித்துக்கொண்டு, ‘ஆண்டவரே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்றான். கர்த்தர் இவனுடைய ஜெபத்தையே அங்கிகரிக்கிறார். வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கைகளை நோக்கிப்பார்ப்பதுபோல, அவர் இரக்கம் செய்யும் வரைக்கும் மனிதருடைய கண்கள் மகத்துவ தேவனையே நோக்கியிருக்க வேண்டும் (சங்கீதம் 123:2)

102ம் சங்கீதத்தை எழுதியவர் தன்னையே நோக்கிப் பார்த்து, தனக்குண்டான அங்கலாய்ப்புகளை எழுதுகிறார். தனக்குண்டான பெருமூச்சு, தனிமையான நிலைமை, நித்திரையில்லாமலும் நிம்மதியில்லாமலும் வாழும் நிலைமை, சத்துருக்களின் நிந்தனை என்று ஒரு மனமகிழ்ச்சியற்ற நிலை இவருடையது. தன்னை நோக்கிப்பார்த்து தன் நிலையைக் கூறி துயரத்துடன் வேண்டியவர், இப்போது தனது பார்வையைக் கர்த்தரை நோக்கித் திருப்புகிறார் (வச.12). கர்த்தரை நோக்கி,  அவரையே அடைக்கலமாகக் கொள்ள நினைக்கும்போது அவருடைய மனநிலையில் ஒரு மாற்றம் உண்டாகிறது. கர்த்தருடைய கிரியைகளைத் தியானிக்கும்போது கர்த்தர் தமது மகிமையில் வெளிப்படுவார் என்றும், தங்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார் என்றும் விசுவாசத்தோடு ஏற்று  அறிக்கை செய்கிறார். அங்கலாய்பு மாறுகிறது; பெருமூச்சு மறைக்கிறது. ‘நீர் என்னை உயரத் தூக்கி, தாழத் தள்ளினீர்” என்றவன், இப்போது, ‘கர்த்தர் தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களினிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்” என்கிறான். என்ன மாற்றம்!

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங்கீதம் 123:1). இதுவே எங்கள் ஜெபமாக இருக்கட்டும். பிரச்சனைகளை நமது மாம்சக் கண்களால் பார்க்கும்போது அவை பெரிதாகத் தெரிந்து நம்மைப் பயமுறுத்தும்.

அதே பிரச்சனைகளை தேவனுடைய கண்ணோக்கில் பார்க்கப் பழகிக்கொண்டோமா னால், தேவனுக்கு முன்பாக அவை ஒரு தூசியாகிவிடும். தாவீது மலைபோல் நின்றுகொண்டிருந்த கோலியாத்தைப் பார்க்காமல் அவனிலும் பெரியவரான கர்த்தரை நோக்கிப் பார்த்து ஜெயம் பெற்றதுபோல நாமும் தேவனை நோக்குவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு: 

எந்த சூழ்நிலையிலும் எவ்விடத்திலும் முதலாவது ஆண்டவராகிய கர்த்தரையே நோக்கிப் பார்க்க என்னைப் பயிற்றுவிப்பேனா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin