? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நெகே. 1:1-11

ஜெபமே ஜெயம்!

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி… நெகேமியா 1:4

‘ஜெபிக்கின்ற காரியம் சிதறாது.” இது எனது தாயார் அடிக்கடி கூறுகின்ற வார்த்தைகள்.  அவருடைய ஜெப வாழ்வே பிள்ளைகள் நமக்கு ஜெபத்தின் மேன்மைகளைக் கற்றுத் தந்தது. வீட்டில் தவறாது நடக்கும் காரியங்களில் இதுவும் ஒன்று. இரவில் குடும்ப ஜெபம் முடிந்த பின்னர்தான் இரவு உணவு கிடைக்கும். என்ன கஷ்டங்கள் வந்தாலும் மனிதரின் பின்னே அவர் ஓடமாட்டார். முழங்கால்படியிட்டு முழுவதையும் கர்த்தரிடமே ஜெபத்தில் தெரிவிப்பார்கள்.

எருசலேமின் அலங்கள் இடிப்பட்டுக் கிடக்கின்ற செய்தி கிடைத்ததும் நெகேமியா தனது கையிலெடுத்த முதலாவது ஆயுதம் ‘ஜெபம்.” தேவசமுகத்தில் அமர்ந்து அழுது சில நாளாய்த் துக்கித்து உபவாசித்து மன்றாடி பரலோகத்தின் தேவனை நோக்கி அவர் ஜெபித்தார். ‘இந்த நிலைமைக்கு நானும் என் தகப்பன் வீட்டாரும் செய்த பாவமே காரணம்” என்று முதலில் பாவ அறிக்கை செய்தார். பாவத்தை மறைக்காமல் அறிக்கை செய்து விட்டுவிட்டால் தேவ இரக்கம் கிடைக்கும் என்பதை உணர்ந்து, பாவமன்னிப்புக் கேட்டு ஜெபத்தை ஆரம்பித்தார். கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்குக் கூறின வாக்குத்தத்தத்தை அறிக்கைசெய்து ஜெபித்தார்.

இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கியிருந்தபோது கர்த்தர் தமது ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் மீட்டுக்கொண்ட ஜனங்கள் இவர்களே என்பதையும் நினைவுகூர்ந்து ஜெபித்தார். கர்த்தருடைய நமத்திற்குப் பயந்திருக்கிற தன்னுடையதும் அடியாருடையதுமான ஜெபத்தைக் கவனித்துச் செவிகொடுக்கும்படி மன்றாடினார். தான் சந்திக்கவிருக்கும் இராஜாவின் இருதயத்தில் இரக்கத்தைப் பிறப்பித்து, தான் செய்யப்போகும் காரியத்தில் தேவ பிரசன்னமும் வழிநடத்துதலும் வேண்டுமென ஜெபித்தார்.

நமது வாழ்விலும் இடிபாடுகள் தடைகள் காணப்படுகின்றபோது யாரிடம் ஓடுகிறோம்? மனிதரிடமா? அல்லது, கர்த்தரிடமா? எல்லா நிலையிலும் முதலில் கர்த்தரிடமே செல்லப் பழகுவோம். வேண்டுதலை நிறைவேற்றும் தேவ பிரசன்னம் நம் முன்னே செல்லாவிட்டால் காரியங்கள் நிறைவேறாது. கர்த்தரைப் பற்றிக்கொண்டாலே எதுவும் நன்மையாக வாய்க்கும். நெகேமியாவின் அர்ப்பணிப்பும் ஆரம்ப ஜெபமும் நமக்கு ஒரு பாடமாகவே அமையட்டும். நெகேமியா தான் எடுத்துவைத்த ஒவ்வொரு படியிலும் ‘பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி” (நெகேமியா 2:4) முன்சென்றார் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

? இன்றைய சிந்தனைக்கு: 

ஜெபத்திற்கே தனி இடம் கொடுத்து ஜெபமே ஜெயம் என வாழ்வேனா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin