📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :1இராஜா 17:1-16

கர்த்தரின் மேலான வழி

கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். சங்கீதம் 25:12

“எனது மனைவி சடுதியாக மரித்தபோது, இனி என்ன செய்வது என்று திகைத்து நின்றேன். பிள்ளைகளின் பராமரிப்பு என்னைப் பயமுறுத்தியது. எனக்குள் ஏற்பட்ட தனிமை என்னைக் கொன்றுபோட்டது. கர்த்தர் பாதம் சரணடைவதைத் தவிர என்னால் செய்யக்கூடியது எதுவும் இருக்கவில்லை. இன்று ஏழு ஆண்டுகள் கழிந்துவிட்டது. இதுவரை என்னையும் பிள்ளைகளையும் ஒரு குறைவுமின்றி வழிநடத்தி வருகிறவர் கர்த்தர் ஒருவரே! அவருடைய வழிகள் ஆச்சரியமானவைகள்.” இது ஒரு தகப்பனின் சாட்சி! வாழ்வில் திடீர் மாற்றங்கள் உண்டாகும்போது, செய்வதறியாது அங்கலாய்ப்பதுண்டு; ஆனால், மாற்றத்தை அனுமதித்தவர் மாற்று வழிகளில் நடத்தாமல் விட்டுவிடுவாரா! ஆம்! ஒரு வழி மூடினால் கர்த்தர் ஏழு வழிகளைத் திறந்து தருவார்; இதுவே நம் கர்த்தரின் மேலான வழி.

“இந்த வருஷங்களில் பனியும் மழையும் பொய்யாதிக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான், அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்று வரப்போகும் பஞ்சத்தை எலியா, ஆகாப் ராஜாவிடம் முன்னறிவித்தான். இந்தப் பஞ்சத்தில் தாக்கப்படப்போவது எலியாவும்தான். ஆனால் எலியாவின் வார்த்தையைக் கவனிக்கவேண்டும். “கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான்” இப்படி அறிக்கையிட்ட எலியாவுக்கு, பஞ்சத்திலும் பிழைக்கவேண்டிய வழியைக் கர்த்தர்  அறிவிக்கிறதை வாசிக்கிறோம். கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிருக்கும்படி யும், காகங்களைக் கொண்டு தாம் எலியாவைப் போஷிப்பதாகவும் கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டானது. அப்படியே எலியா கீழ்ப்படிந்த வேளையிலே, கர்த்தரும் தாம் கூறியபடி காகங்களைக்கொண்டு எலியாவைப் போஷித்தார். பின்னர், ஆறு வற்றியபோது, ஒரு விதவையைக் கொண்டு எலியாவைப் போஷித்து நடத்தினார். கர்த்தரின் மேலான வழியோ வியக்கத்தக்கது.

சூழ்நிலைகள் சடுதியாக மாறும்போதும், இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படும்போதும் நாமும் நிலைகுi-லந்துபோகிறோம், அது இயல்புதான். ஆனால் நாம் வித்தியாசமானவர்கள்; நாம் சகலத்தையும் ஆளுகைசெய்கின்ற தேவனுடைய பிள்ளைகள். பஞ்சத்தில் மாத்திரமல்ல, வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கர்த்தரே நமக்குப் பிரயோஜனமான வழிகளைப் போதித்து நடத்துகிறவர். அந்த அனுபவத்தைப் பெற்றிருந்ததால்தான் தாவீது, “தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்” என்று கர்த்தரைக்குறித்து சாட்சி கூறியுள்ளார். “கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ” அவனுக்கே தான் கர்த்தர் தமது வழிகளை தெரியப்படுத்துகிறார். ஆக, காரியம் நம் கைகளிலேயே உள்ளது. நாம் தேவனுக்குப் பயந்து, அவர் சித்தப்படி நடக்கிறோமா?

💫 இன்றைய சிந்தனைக்கு:    

தமது வழிகளைத் தெரிவித்து, தமது பாதைகளைப் போதிக்கின்ற (சங்.25:4) கர்த்தரையே சார்ந்து வாழுகிறேனா? அல்லது, சூழ்நிலைகளால் தாக்கப்பட்டு மனமடிவாகின்றேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin