[📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :ஏசாயா 53:3-5
உடைக்கப்படுதலின் உதயமே உருவாக்கம்
…இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எபி.2:10
உடைக்கப்படுதல் அல்லது உடைபடுதல், இதுவே உருவாக்கத்தின் முன்னோடி. களிமண் பிரித்தெடுக்கப்பட்டு, பிசையப்பட்டு, வனையப்பட்டு, சூளையில் இடப்பட்டு சுடப்பட்டால்தான் அது பாத்திரம். வனையும்போது கெட்டுப்போனால் அது மீண்டும் உடைக்கப்பட்டு, குயவனின் மனதிலுள்ள உருவத்தை அது சரியாக எடுக்கும்வரைக்கும் மீண்டும் வனையப்படும். நிலத்திலிருந்து எடுக்கப்படுகின்ற பொன்னானது அக்கினியில் போடப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பல தடவைகள் அடிக்கப்பட்டு நொருக்கப்பட்ட பின்னர்தான் அழகிய தங்கநகைகள் உருவாகின்றன. மெழுகுதிரியின் மெழுகு உருகி உருவிழக்கும்போதே வெளிச்சம் பிறக்கிறது.
உடைக்கப்பட்டு தகுந்த பாத்திரமாக உருவாக்கப்படாத எதுவும், இன்னும் சொன்னால் சோதிக்கப்படாத எதுவும் பாவனைக்கு உதவாது. நமது வாழ்வில் இந்த உடைக்கப்படுதல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதிலும், இது அவசியமானதொன்று என்பது மிகப் பொருத்தமாகும். இயேசு, தேவனாயிருந்தும், தமது தெய்வீகத்தை பிரயோகித்து இந்த உலகில் சொகுசாக வாழ்ந்து நமக்கு இரட்சிப்பைச் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. பாவத்தின் சம்பளமான மரண உபாதையை அவர் நமக்காக ஏற்றுக்கொண்டு உடைக்கப்பட்டார். இதையே எபிரெய ஆசிரியர், தேவன் நம்மைத் தமது மகிமையில் கொண்டுசேர்ப்பதற்காக, நமது இரட்சகரை தமது செட்டைக்குள் மறைத்துவைக்க வில்லை; மாறாக, “உபத்திரங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதா யிருந்தது” என்று விளங்க வைத்துள்ளார். இன்னுமொரு விடயமும் இருக்கிறது. அந்த உபத்திரவத்திற்கு நமது ஆண்டவரும் நம்மை ஒப்புக்கொடுத்திருந்தார் என்பது மிக முக்கியம்.
இன்று நாம் உடைக்கப்படும்போது ஒன்று, நாம் உருவாக்கப்படுகிறோம்; அதிலும் மேலாக, நமக்காக உடைக்கப்பட்ட ஆண்டவர் அனுபவித்த பாடுகள் நம்முடையதிலும் அதிக வேதனை நிறைந்தது என்பதையும் உணருகிறோம். உடைக்கப்படுதலினூடாக கடந்துபோவதற்கு கர்த்தருக்குள்;ளான அர்ப்பணிப்பு, சுயவெறுப்பு, விசுவாசம் போன்றவை அவசியம். இயேசு, ஒரு முழுமையான மனிதனாக பாடுகளையும் அவமானங்களையும் நிந்தைகளையும் சகித்ததினால்தான், அவரை விசுவாசிக்கிற நாம் பாவமன்னிப்பு, புதிய வாழ்வு என்னும் உருவாக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இயேசு அந்த உடைபடுதலுக்கூடாகக் கடந்ததால்தான் உயிர்த்தெழுதலின் மேன்மையை நாம் கண்டோம். நிச்சயம் அவரோடேகூட உயிர்த்தெழுவோம் என்ற நிச்சயத்தையும் நாம் பெற்றோம். ஆகவே, வாழ்வில் துன்ப துயரங்கள் நம்மை உடைக்கும்போது, அதன் பின்னாலுள்ள உருவாக்கத்தை நினைத்து பொறுமையுடன் சகித்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்துவோமாக.
💫 இன்றைய சிந்தனைக்கு:
பாடுகள் தீமைக்கல்ல, உருவாக்கம் என்னும் நன்மைக்கே என்பதை நினைந்து, பாடுகளிலும் பரமனைத் துதிப்பேனா?
📘 அனுதினமும் தேவனுடன்.
