ஜூலை 5 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 5:1-10

தேவனிடத்தில் பெற்ற சமாதானம்

உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து… ரோமர் 5:3

ஒரு மேசை செய்யவேண்டும் என்றால், பலகைகளை எடுத்து, மேசையே வா என்றால் அது கிடைக்குமா? பலகையை அதற்கேற்றவாறு அறுத்து, பின்னர் ஒன்றோடொன்று வைத்து ஆணி அறைந்து பிணைத்து, இப்படியாக அதன் எல்லா பக்கங்களும் அடித்து, தேய்த்து முடித்தால்தான் ஒரு அழகான மேசையை உருவாக்கமுடியும். இதுபோலவே அநேக தேவபிள்ளைகள் வாழ்வில், அவர்கள் கடந்து வந்த உபத்திரவங்களுக்கூடாக அவர்கள் தேவனுக்கென்று இன்னமும் உறுதியாக உருவாக்கப்பட்டி ருக்கிறார்களே தவிர, அவர்கள் சோர்ந்து போனது அரிது என்று காண்கிறோம். காரணம், அவர்களுக்கு சகல சூழ்நிலைகளிலும் சமாதானம் கொடுத்தவர் கர்த்தர் ஒருவரே. தேவ சமாதானத்தைப் பெற்றவர்கள் சோர்ந்துபோக மாட்டார்கள்.

இன்றைய தியானப்பகுதியும் நமக்கு அதைத்தான் கற்றுத்தருகிறது. உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. இவையெல்லாவற்றிலேயும் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ஆகவே தேவனுடைய பிள்ளைகளுக்கு உபத்திரவம், அவர்களை அழிப்பதற்கல்ல உருவாக்குவதற்கே என்பதை உணர்ந்தவர்களாக, உபத்திரவத்திலும் மேன்மை பாராட்டக்கடவோம்.

நாம் இப்போது கடைசிக் காலத்தின் கடைசி நாட்களில் நிற்கிறோம். நாம் அநேக உபத்திரவங்களின் வழியாக செல்லவேண்டியவர்களாயும் இருக்கிறோம். இவையெல்லாவற்றிலேயும் தேவன் நம்மைச் சமாதானத்துடன் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார். ஆக, தேவ சமாதானத்துடன் நாம் உலகத்தால் வரும் உபத்திரவங்களுக்கு தைரியமாக முகங்கொடுப்போம். இன்று அநேகர் உலகம் கொடுக்கிற சமாதானத்தில் நிறைவு கண்டிருப்பதால், திடீரென அந்த சமாதானம் அழிந்துபோகிற போது செய்வதறியாது தவிக்கிறார்கள். ஆனால் இயேசு கொடுக்கும் சமாதானமோ என்றைக்கும் நிலைத்து நிற்கிறதாய் இருக்கிறது. காரணம், அது சுற்றிலுமுள்ள சூழ்நிலையில் தங்கியிராமல், முற்றிலும் எமக்குள்ளாகவே இருக்கிறதாய், எமது இருதயத்திலுள்ள சமாதானமாய் இருக்கிறது. அது சூழ்நிலைகள் எப்படியாக மாறிப்போனாலும் எமது உள்ளத்தில் மாறாததாய்த் தங்கியிருக்கும் சமாதானம். அது தேவன் தரும் சமாதானம். அது தேவபிள்ளைகளுக்கு மாத்திரமே உணர்ந்திடக்கூடிய சமாதானம். ஆம், அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது (2கொரி.4:17)

💫 இன்றைய சிந்தனைக்கு:  

உபத்திரவத்தில் மேன்மைபாராட்டுதல் என்பது என்ன? பவுலின் அனுபவத்தைச் சிந்திப்பேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

14 thoughts on “ஜூலை 5 புதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin