? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 1:32-39

முன் எழுந்து முன் அறிகிறவர்

அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார். மாற்கு 1:35

84 வயது நிறைந்த ஒரு முதியவர், அதிகாலை 4 மணிக்கு முன்னரே எழுந்து, வேதாகமம் படித்து, தியானித்து, கண்ணீரோடு ஜெபித்துமுடிப்பார். இந்த வயதில் இது எப்படி முடியுமாயிருக்கிறது என்று கேட்டபோது, “சில ஆண்டுகளின் முன்னர்தான் ஜெபத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன், இந்த பரம சந்தோஷத்தை இதுவரை இழந்துவிட்டதை நினைத்து மனம் உடைந்துவிட்டேன். இப்போது, அதிகாலையில் தன் பிதாவைச் சந்தித்த இயேசுவை என் ஜெப நேரத்தில் சந்திப்பதால் அந்த நாளின் காரியங்கள் எதுவாயினும் அதற்கு முகங்கொடுக்க இந்த முதிர்வயதில் எனக்கு அதிக பெலன் உண்டாயிருக்கிறது” என்றார் மகிழ்ச்சியுடன்.

சாயங்காலம் வரைக்கும் ஜனங்களின் தேவைகளைச் சந்தித்து, அடுத்த நாளில், அதிகாலையில் இருட்டோடே எழுந்து, யாரும் அறியாமல் புறப்பட்டு வனாந்தரமான ஒரு இடத்திற்குத் தனியே போய், பிதாவை நோக்கி ஜெபம்பண்ணினார் இயேசு. அந்த நாளிலும் அடுத்த ஊர்களுக்கு அவர் போகவேண்டியிருந்தது, பிரசங்கம்பண்ண வேண்டியிருந்தது, வியாதியஸ்தர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. இவை யாவுக்கும்  முன்னர், இருட்டோடே எழுந்து, தனிமையிலிருந்து இயேசு ஜெபிக்கிறார். அன்று அவர் சந்திக்கப் போகிறவர்கள் தங்கள் பிரச்சனைகள் இன்னது என்று அறிவதற்கு முன்னதாகவே, இயேசு அன்று தாம் சந்திக்கப்போகிற யாவையும் முன்னறிந்தவராக தனிமையில் ஜெபிக்கிறார்.

நாம் நித்திரைவிட்டு விழிக்கும் அந்த விநாடியிலே சங்கடப்படுகின்ற நமது உணர்வு களும் விழித்துக்கொள்கின்றன, ஆனால், நாம் விழிக்கும் முன்னரே ஒருவர் நமது சகலவற்றையும் அறிந்தவராய், பதிலளிக்கிறவராய், நம்மைத் தாங்கிக்கொள்ள ஆயத்தமாய் நிற்கிறார் என்ற சிந்தனை இன்றும் என்றும் நம்மைத் தேற்றட்டும். அவர் எப்போதும் நமக்கும், நமது பிரச்சனைகளுக்கும் முன்னதாகவே நமக்கு முன்னே நிற்கிறார். அன்று மனுஷனான இயேசு அதிகாலையில் எழுந்தார், ஆனால் இன்று அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. அவருடைய கிருபை நம்மை எல்லாவற்றினூடாகவும் தூக்கிச்சுமக்க ஆயத்தமாயிருக்கிறது. நமது பாரங்களை நாம் அறிவதற்கு முன்னரே எல்லாவற்றையும் அறிந்தவர் நம் அருகே நிற்கிறார். அவற்றை அகற்றவோ, அல்லது அவற்றுக்கூடாக நம்மை நடத்தவோ அவரால் கூடும். ஆகவே, அதிகாலை மகிழ்ச்சியை இதுவரை இழந்துவிட்ட பாவத்தை அறிக்கைசெய்து உடைந்த உள்ளத்தோடே மனந்திரும்புவேனாக. அதிகாலை தூக்கம் சுகமானது, அந்த சுகம்தான் நமக்குச் சோதனையாக இருக்கிறது. நம்மையும், அந்தந்த நாளின் நமது காரியங்களையும் முன்னறிந்தவராக அதிகாலை இருட்டோடே அவர் பாதம் நாடி செல்வோமா!

? இன்றைய சிந்தனைக்கு:

இதுவரை அதிகாலை ஜெபத்தில் இருப்பேனென்றால் இன்னும் நேரத்தோடு எழுந்திருப்பேனா? அப்படியில்லையெனில், இன்று ஒரு தீர்மானம் எடுப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin