? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 2:1-12

கூரைகள் உடையட்டும்!

…அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். மாற்கு 2:4

“தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்” என்றார் ஒருவர். ஆம், மனிதன் தன் தேவைகளைப் பூர்த்திசெய்ய வழிகளைக் கண்டுபிடிக்கிறான், ஆனால் நிறைவேற்றுவது கர்த்தர் அல்லவா! நமது தேவைகளைப் பூர்த்திசெய்ய அவருக்கு ஒரு நொடிப்பொழுது போதும். ஆனால், அவர் செயற்படுவதற்கு மனிதனையே எதிர்பார்க்கிறார். ஒரு தரிசு நிலத்தை விளைச்சல் நிலமாக மாற்ற தேவனுக்கு முடியாதா? ஆனால், அதை உழுது, பண்படுத்தி, விதை விதைத்துப் பாதுகாக்கும் வரைக்கும் கர்த்தர் மனிதனையே எதிர்பார்க்கிறார், பின்பே விளைச்சலைக் கொடுக்கிறார். இப்படியிருக்க, ஒரு மனிதனின் வாழ்வுக்காக இன்னொரு மனிதனுடைய பராமரிப்பை கர்த்தர் எதிர்பார்க்கமாட்டாரா? ஆனால் இந்தப் பராமரிப்பாளன் இதற்காக எதையும் உடைத்தெறியத் தயாராயிருக்க வேண்டுமே!

கப்பர்நகூமில் ஒரு வீடு ஜனங்களால் நிரம்பி வழிகிறது. ஏனெனில் உள்ளே இயேசு இருக்கிறார். அந்த சமயத்தில் நாலுபேர் ஒரு படுக்கையில் ஒருவனைச் சுமந்துகொண்டு வருகிறார்கள். ஆம், அவன் திமிர்வாதத்தால் அவதிப்பட்டுக் கிடக்கிற ஒருவன். இயேசு குணமாக்குவார் என்று விசுவாசித்த இந்த நாலுபேரும் அவனைத் தூக்கிவருகிறார்கள். வீட்டினுள் நுளையமுடியாத ஜனநெரிசல். இதோ, ஒரு தேவை, புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. இந்த மனிதனை இயேசுவின் முன் கொண்டுபோகவேண்டும் என்ற ஒரே சிந்தனையில், பின்விளைவைக்கூட சிந்திக்காமல், வீட்டின் கூரையைப் பிரிக்கிறார்கள். அதை யாராலும் தடுக்கமுடியவில்லை. உடைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட கூரை வழியாய் படுக்கையை இயேசுவின் முன் இறக்கிவிட்டார்கள். தன் பிரசங்கத்தையோ அந்தக் கூட்டத்தையோ குழப்பியதாக இயேசு எதுவும் கூறவில்லை, இயேசு செய்தது என்ன? “இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்கிறார். என்ன ஆச்சரியம்? முதலாவது, விசுவாசம் நோயாளியுடையது அல்ல, சுமந்துவந்தவர்களின் விசுவாசம், ஒரு மனிதனின் மீட்புக்காகக் கூரையைப் பிரிக்கவும் தயங்காத விசுவாசம், அதைக் கர்த்தர் கண்டார். அடுத்தது, அவன் பாவத்திலிருந்து விடுதலையாகவேண்டும் என்ற அவசரத்தையும் இயேசு கண்டார். இன்று அந்த நாலுபேராக நாம் இருக்கிறோமா? நம்மால் மனிதரை எடைபோட முடியாது. ஆனால், தேவையிலுள்ள ஒருவனை ஆண்டவரிடம் கொண்டு வருவதற்கு, பெருமை, அலட்சியப்போக்கு போன்ற கூரைகளை விசுவாசத்தோடு உடைத்தெறிய நாம் தயாரா? நாம் காணும் பிறனுடைய தேவையை உணர்ந்து தடைகளை உடைத்தெறிந்து அவனை ஆண்டவரிடம் கொண்டுவரும்போது, ஆண்டவர் அவன் ஆத்துமாவையும் சேர்த்துக் குணப்படுத்தி, அவனை நரகத்திலிருந்து மீட்டெடுக்கிறார் அல்லவா!

? இன்றைய சிந்தனைக்கு:

பிறரை இயேசுவண்டை கொண்டுவர, நமக்குத் தடையாய்இருக்கிற கூரைகள் எவை? அவற்றைத் தகர்த்தெறிந்து மக்களை இயேசுவிடம் ஏன் நாம் சுமந்துவரமுடியாது?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin