ஜூலை 11 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எண். 20:1-13| உபா. 3:23-28

உடைவில் பக்குவம்

…போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம். உபாகமம் 3:26

எனக்குக் கிடைக்காதது பிறனுக்கு, அதிலும் யார் நிமித்தம் அதை  இழந்தேனோ, அவனுக்குக் கிடைக்கவே கூடாது என்று விரும்புகின்ற கடின இதயமுள்ள மனிதர்களில் நாமும் ஒருவரா? நமக்குள் அப்படிப்பட்ட ஒரு குணம் மறைந்திருக்குமானால், அந்தக் குணத்தை கர்த்தர் நமக்கு உணர்த்தி, அதை உடைத்துப்போடுவாராக.

உடைந்த உள்ளத்தின் வெளிப்பாடுதான் உபாகமம் புத்தகம் என்றால் மிகையாகாது. எகிப்தில் அடிமைகளாக இருந்த தமது மக்களை விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடும் தேசத்துக்குக் கொண்டுபோகும்படி, முட்செடியில் தரிசனமான கர்த்தர் மோசேக்குச் சொன்னபோதும், “என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன்” என்று யாத்.3:10ல் சொன்னபோதும், அந்தச் செழிப்பான தேசத்தில் தான் பிரவேசிக்கப்போவதில்லை என்பது மோசேக்கு எப்படித் தெரியும்?ஜனங்கள் கன்றுக்குட்டியை வணங்கியதால் கோபங்கொண்ட கர்த்தர், “நீ நடத்திக்கொண்டு வந்த உன் ஜனங்கள்” என்றும், “இவ்விடத்தைவிட்டு, பாலும் தேனும் ஓடுகிறதேசத்துக்குப் போங்கள்” என்றும் “ஆனாலும் நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன்” என்றும் சொன்னபோது மோசே எவ்வளவாக உடைந்தார் என்பதை யாத்.33ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இவை ஒருபுறமிருக்க, மேரிபாவின் தண்ணீரண்டையில் நடந்த சம்பவம் மோசேயின் வாழ்வையே உடைத்து நொறுக்கிப்போட்டது. “நான் கொடுத்த தேசத்துக்கு நீ அவர்களைக் கொண்டுபோவதில்லை” என்று திடமாகக் கர்த்தர் சொல்லிவிட்டார். இரு தடவை இந்த மக்களை அழிக்க கர்த்தர் நினைத்தபோதும், அவர்களுக்காக மன்றாடி, கர்த்தருடைய மனமாற்றத்தைக் கண்ட மோசே இங்கே தோற்றுப்போய் நின்றது எப்படி? மோசே மறுபடி வேண்டியும், “இனி இதைக்குறித்துப் பேசவேண்டாம்” என்று கர்த்தர் முற்றுப்புள்ளி வைத்தபோது (உபா.3:25) மோசே எவ்வளவாக உடைந்திருப்பார்! தான் கானானுக்குள் பிரவேசிக்கப்போவதில்லை என்பதை தீர்க்கமாக அறிந்திருந்தும், அங்கே பிரவேசிக்கின்ற மக்களாவது கர்த்தருக்குப் பிரியமாய் நடக்கவேண்டும் என்று பாரப்பட்;டு, அவர்களுக்குக் கற்றுக்கொடுத்ததை உபாகமத்திலே வாசிக்கிறோம்.

இறுதியில் கர்த்தர் அவரை பிஸ்காவின் கொடுமுடிக்கு வரவழைத்து, தேசம் முழுவதையும் காண்பித்தது, “நீ அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை” (உபா.34:4) என்று திரும்பவும் சொன்னபோது ஒரு மனிதனாக மோசேயின் உள்ளம் எப்படி உடைந்திருக்கும் என்பதை நாம் உணரலாம். ஆனால் அந்த உடைந்த உள்ளம், “உன் தேவனாகிய கர்த்தர்” என்று திரும்பத் திரும்பக்கூறி, “இஸ்ரவேலே நீ பாக்கியவான்” என்று தன் உரையை முடித்த மோசேயின் பக்குவப்பட்ட மனம் நமக்கு உண்டா? சிந்திப்போம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

என் உள்ளத்தின் ஆழத்தில் ஏதாவது கடினமான பகுதி இருக்குமானால் அது இன்றே உடைக்கப்பட ஒப்புக்கொடுத்து, தேவனை மகிழ்விப்பேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

1,629 thoughts on “ஜூலை 11 திங்கள்