? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  மாற்கு 16:1-10 2கொரிந்தியர் 1:3,4

?  அழுகையிலும் ஆறுதல்

அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில் அவர்களிடத்திற்குப் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். மாற்கு 16:10

இழந்துபோன நிலையிலே இருந்தாலும், எவனொருவன் ஆண்டவருக்காக உண்மையான உள்ளத்துடன் காத்திருக்கிறானோ, அவனே தமது நற்செய்தியை அறிவிக்க உகந்தவனென ஆண்டவர் காண்கிறார் என்று நேற்றுக் கவனித்தோம். இவர்களை இயேசு யாரிடத்தில் அனுப்புகிறார்? இயேசுவைக் கொலைசெய்தவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர்களிடம் அனுப்பினாரா? இல்லை. இயேசு உயிர்த்தெழுவார் என்று யாராவது விசுவாசித்திருக்கிறார்களா என்று பார்த்து, அவர்களிடம் அனுப்பினாரா? இல்லை. தம்மோடு இருந்தவர்களிடமே மரியாளை அனுப்புகிறார்.

நம்பிக்கை இழந்து, செய்வதறியாது ஏங்கிய நிலையிலும், தாமும் கொலை செய்யப்படுவோமோ என்று பயந்த நிலையிலும், நடுநடுங்கி துக்கித்துக்கொண்டிருந்த சீஷர்களிடமே மகதலேனா மரியாள் உயிர்த்தெழுந்த செய்தியுடன் சென்றாள். அவளும் இந்த சீஷர்களுடைய நிலையில் ஒருநாள் இருந்தவள்தான். துக்கப்படுகிறவர்களின் துக்கத்தை அதே அனுபவத்தினூடாகச் சென்றவர்களால்தான் நன்றாய் அறியக்கூடும் என்பதனாலோ, அந்த ஆற்றுபணிக்காக ஆண்டவர் இந்த மரியாளை அனுப்புகிறார்.

இங்கே இரண்டு விடயங்கள் நமக்குண்டு. ஒன்று பவுலடியார் எழுதியபடி, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு ஆறுதலாய் நாமிருக்கும்படிக்கு, எங்கள் துக்கங்களில் எங்களை ஆறுதல்படுத்துகிறவர், நம்மைத் தூக்கி நிறுத்தி, ஆறுதலின் ஊழியத்திற்காக நம்மை அனுப்புகிறார். ஆகையால் நாம் அனுபவித்த பாடுகள் அநேகருக்கு ஆறுதலளிக்கும்படி பிரயோசனமாயிருப்பதற்காகக் கர்த்தரைத் துதிப்போம்.

அடுத்தது, துக்கித்து அழுதவர்கள் யார்? இயேசுவோடே கூடவே இருந்தவர்கள்தானே. ஆம், நாம் ஆண்டவரின் பிள்ளைகளாக்கப்பட்டாலும் நமக்கும் துக்கமுண்டு; அழுகையும் கண்ணீரும் உண்டு. ஆனாலும், ‘நான் உயிரோடே எழுந்தேன்; இன்றும் உன்னோடே இருக்கிறேன்” என்ற நற்செய்தியைத் துக்கிக்கும் தமது பிள்ளைகளுக்கே அவர் அனுப்புகிறார். ஆகவே உங்கள் துக்கங்களைக் களைந்துவிட்டு எழுந்துபோய் இயேசு ஜீவிக்கிறார் என்ற நற்செய்தியை, துக்கத்துடன் இருக்கும் பிறருக்கு அறிவியுங்கள்; அவர்களை தேற்றி ஆற்றுங்கள். அன்று மகதலேனா மரியாள் கூறியதை உடனடியாக சீஷர்கள் நம்பிவிடவில்லை. ஆனாலும் அவள் கூறவேண்டியதைக் கூறத் தவறவில்லை. இன்று துக்கத்துடன் இருப்பவர்களைக் காணும்போது, கர்த்தரிடத்தில் ஆறுதல்பெற்ற எனது பதிற்செய்கை என்ன? கர்த்தருடைய சமாதான செய்தியை நான் அடக்கி வைப்பேனா? அல்லது எடுத்துச்சென்று பிறரையும் ஆறுதற்படுத்துவேனா? இன்று பிறருக்கு நான் ஆறுதலளிப்பவனாக இருப்பேனா?

? இன்றைய சிந்தனைக்கு:

ஆறுதல்பணியை, நற்செய்திப்பணியை தடைகளையும் மீறி செய்துகொண்டே இருப்போமாக.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *