? சத்தியவசனம் – இலங்கை. ??


? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 138:1-8; மத்தேயு 14:23-33

? துன்பத்திலும் துணை அவரே

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், நீர் என்னை உயிர்ப்பிப்பீர். சங்கீதம் 138:7

நம்மில் யார்தான் துன்பத்தை வரவேற்கிறோம்? அதற்காக துயர அனுபவங்கள்  நெருங்காமல் போய்விடுமா? நாம் வாழும் சூழ்நிலைகளே எதிர்பாராத நேரத்தில், நம்மை துன்பப்படுத்தலாம்; அல்லது நாமாகவே பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, பின்னர் மீள வழி தெரியாமல் தவிக்கலாம். நல்லது என்று நாம் நினைக்கின்ற சில காரியங்கள், நமக்கே பாதகமாக மாறிவிடலாம். நாம் நேசிப்பவர்களும் சிலசமயங்களில் நம்மை புரிந்துகொள்ளாமல் நம்மை துன்பப்படுத்தலாம். மரணத்திற்கேதுவான கடும் வியாதி, இழந்துவிட்ட நம் அன்புக்குரியவர்கள், நம்மை துன்பத்தின் உச்சிக்கே இழுத்துச் சென்றுவிடலாம். ஜெபித்தும் பதிலில்லாமையால் சோர்ந்தும் போகலாம். சத்துரு சளைக்காமல் நம்மைப் பின்தொடரலாம். ‘செத்துப்போனால் என்ன” என்று எண்ணுமளவிற்கு துன்பம் பெருகிப்போகலாம்.

ஆனால் ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ‘மேலும் நம்பிக்கைக்கு இடமில்லை என்று தோன்றுகின்ற சமயமே, கர்த்தர் சத்துருவின் உக்கிரத்திற்கு எதிராய் தமது கரத்தை நீட்டி, தம்மை நம்பினோருக்கு ஜெயம் கொடுக்கும் வேளையாகும்.” இதனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? சமுத்திரத்தின் மேற்புறத்திலே அலைகளும் இரைச்சலும் அதிகம். ஆனால் அதன் ஆழத்தில் எத்தனை அமைதியும் அழகும் நிறைந்திருக்கும்! இயேசுவே தமது சீஷர்களைப் படகிலேறிப் போகச் சொன்னார். அவ்வேளையில்தானே பலத்த காற்று வீசியது. இயேசு அவர்களைக் கைவிட்டாரா? நாம் நினைத்தா இந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்தோம். இது தேவன் கொடுத்த ஈவு. நம் வாழ்க்கைப் படகு அமிழ்ந்துவிட ஆண்டவர் ஒருபோதும் அனுமதியார். அன்று கடலில் நடந்து வந்து சீஷரைக் காத்தவர் இன்னமும் உயிரோடேயே இருக்கிறார். அன்று அந்த மூன்று எபிரேய வாலிபரும் தாமாகவா அக்கினிச் சூளையை ஏற்றுக்கொண்டார்கள்? தள்ளிவிடப்பட்டார்கள். தள்ளிவிட்டவர்கள் எரிந்துபோனார்கள். அக்கினியில் போடப்பட்டவர்களோ நான்காம் நபரோடு உலாவிக் கொண்டிருந்தார்கள். ராஜா மெய்த்தேவனை அறிந்துகொண்டான் (தானி. 3:25).

எதிர்பாராமலோ, வலுக்கட்டாயமாகவோ துன்பத்தில் துவண்டிருக்கும் தேவபிள்ளையே, தைரியமாயிரு. இயேசு இல்லாத, சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வைவிட, இயேசுவோடு கூட நடக்கும் கல்வாரி பாதை மேன்மையானது, பரிசுத்தமுள்ளது; பாடுகளானாலும் தேவ பாதுகாப்பு மிகுந்தது; அது தேவனுக்கானது. ஏனெனில் முந்தியதின் முடிவோ பரிதாபம்; பிந்தியதோ நம்மை நித்திய மகிமையிலே சேர்க்கும்படிக்கு நம்மை உயிரோடே எழுப்பிவிடுகிறது.

? இன்றைய சிந்தனைக்கு:

இனிவரும் நாட்களில் துன்பதுயரம் ஏற்படும்போது, என் பதிலுரை தேவனுக்கேற்றதாக இருக்க இன்று நான் என்ன செய்யப் போகிறேன்?

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – சகோதரி சாந்தி பொன்னு

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *