📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 3:6-10

நீ எங்கே இருக்கிறாய்?

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதியாகமம் 3:9

இப்பொழுதெல்லாம் அனைவரது கையிலும் எந்நேரத்திலும் தொலைபேசி இருப்பதால், அழைப்புக்களும் ஓய்வில்லாமல் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நாம் ஒரு நூலகத்தில் இருக்கிறபோதும், படுத்து உறங்கிக்கொண்டு இருக்கிறபோதும், வீட்டில் இருக்கிறபோதும் வருகிறதான தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் பேசுகிற விதங்களில் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. காரணம் நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம், அதன் அடிப்படையிலேயே பேசுவோம்.

இங்கே, கீழ்ப்படியாமையினாலே பாவத்தில் வீழ்ந்துபோன ஆதாம் இப்போது தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு, அவருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே அவனது மனைவியோடுகூட ஒளித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது தான் தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்” என்கிறார். அவன் எங்கே இருக்கிறான் என்பது கர்த்தருக்குத் தெரியாதா? தெரியாததால் கர்த்தர் ஆதாமைக் கூப்பிடவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆதாமே உணர்ந்து கொள்வதற்காகவே கர்த்தர் கேட்கிறார். அப்போதுதான் ஆதாம் தனது நிலையை உணருகிறான். “நான் நிர்வாணியாய் இருக்கிறேன், பயந்துபோய் ஒளித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறான். அப்பொழுது தேவன், “நான் புசிக்கவேண்டாம் என்று விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ” என்றபோது, “நீர் தந்த ஸ்திரீதான் தந்தாள்” என்று ஏவாளைக் குற்றஞ்சாட்டிய பின்பே, தான் புசித்ததை ஒப்புக்கொள்ளுகிறான்.

இன்று நாமும்கூட தவறு இழைத்துவிட்டு, அதை நியாயப்படுத்த முனைவதுண்டு. எமது தவறுக்குப் பிறரை அல்லது சூழ்நிலையைச் சாட்டுவதுண்டு. நாம் பாவத்தில் விழுந்தால் முதலாவது எங்கே இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். தேவனுடைய சமுகத்தி னின்று, அவர் வார்த்தையினின்று விழுந்துவிட்டோம் என்பதைப் புரிந்திடவேண்டும். அடுத்து, நாம் செய்த தவறுக்கு நாமேதான் பொறுப்பேற்கவேண்டும். தவறை உணர்ந்தவனே, மனந்திரும்பி வாழுவான். சாட்டுப்போக்குச் சொல்லித் தப்ப நினைப்பவன் ஒருபோதும் மனந்திரும்பமாட்டான். இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்ப்போம். தேவனைவிட்டு விலகியிருந்தால், மீண்டும் தேவனண்டை திரும்புவோம். நாம் தவறின நேரங்களை நினைத்துப் பார்த்து, தேவனிடத்தில் மன்னிப்பைப்பெற்று மீண்டும் தேவனோடு வாழத் தொடங்குவோம். நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தேவன் அறிவார். ஆனால் நாம் அதை உணரவேண்டும். எப்போது அதை உணருகிறோமோ அன்றே எமக்கு இரட்சண்ய நாள். உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன். சங்கீதம் 139:7.

💫 இன்றைய சிந்தனைக்கு:   

கர்த்தர் என்னைத் தேடுகிறவர் என்றும், இன்று நான் எங்கே நிற்கிறேன் என்றும் சற்று சிந்தித்து, தேவனண்டை மனந்திரும்புவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin