? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 73:1-28

? என்னைத் தாங்கிடும் கிருபை

என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 94:18

நமது வாழ்க்கைப் பாதை நமக்கு எப்போதும் நியாயமானதாகவே தெரிகிறது. நமது நினைவுகளும் திட்டங்களும்கூட சரியானதாகவே தோன்றுகின்றன. வீதியிலே ஒரு சரியான நோக்கோடு நடந்துசெல்லும் ஒருவர், நினையாத நேரத்தில் பாதையிலுள்ள சிறுகுழியிலும் மண்மேடுகளிலும் கால் சிக்கி விழுந்து விடுகிறார்; அதேபோல, சரியான பாதை என்று நாம் எண்ணும் பாதையிலும் இடர்கள் வரத்தான் செய்யும். நினைவுகளும் திட்டங்களும் திடீரென்று சரிய ஆரம்பிக்கும். துன்மார்க்கர் தளைக்கும்போதும், நமக்கு தீங்கு செய்கிறவர்களும் நம்மைத் தள்ளி வைப்பவர்களும் மேன்மையடையும் போதும், நமது மனம் குழம்புகிறது. அதற்கு இடமளிப்போமானால் நிற்கிறோம் என்கிற நாமும் சற்று சறுக்கிவிழத்தான் செய்வோம். தேவபிள்ளையே, நிதானத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்திருக்கிற உன் வாழ்விலும் சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கிறதா? விடை காணமுடியாத பல கேள்விகள் உன்னைச் சோர்வடையச் செய்கின்றனவா? சறுக்குகின்ற உன் கால்களைத் தூக்கிவிடுவார் யார் என்று ஏங்கி நிற்கிறாயா?

தேவன் நிச்சயம் பதில் தருவார். எருசலேம் தேவாலயத்தின் பாடற்குழுவின் பிரதான தலைவனும், துதி கீதங்கள் இசைப்பவனுமாகிய ஆசாப்பின் கால்கள்கூட சறுக்கிவிட்டதாம். அதாவது, ‘துன்மார்க்கர் செழித்தோங்குவதைக்கண்டு பொறாமை கொண்டேன். நான் விருதாவாகவே என் இருதயத்தை சுத்தம்பண்ணி குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்” (சங்.73:13) என அலுத்துக்கொண்டான் ஆசாப். இதுதான் அவனுடைய சறுக்கல். ஆனால், அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோது உண்மையைக் கண்டான். துன்மார்க்கரின் முடிவை அவனால் உணரமுடிந்தது. அப்போது, தன் நினைவை மாற்றிக்கொண்டவனாக, ‘ஆனாலும், என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” என்றான்.

தேவ பிள்ளையே, உன் மனக்குழப்பத்திற்கு காரணங்கள் என்ன? எதுவாயிருந்தாலும் தேவனது சமுகத்திற்குள் போக மாத்திரம் மறந்துவிடாதே. அங்கேதான் உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். நீ விழுந்துவிட முன்னதாகவே, அவரது ஒப்பற்ற கிருபை உன்னை மறுபடியும் ஜீவபாதையிலே நிலைநிறுத்தும். கூப்பிடும் சத்தத்தைத் தேவன் கேட்கவும், நம்மைத் தாங்கிக்கொள்ளவும் நாம் எம்மாத்திரம்? ஆனால், அதுவே அவரது ‘கிருபை” என்று அறிந்துகொள். உன் நினைவுகள் தத்தளிக்க ஆரம்பிக்கும்போதே தேவனை நோக்கிக் கூப்பிடு. உனக்குப் பிரியமானவர்கள் உனக்கு  எதிராகக் திரும்பும்போது, உன் மீட்பரை நோக்கி அபயமிடு. உன் சூழ்நிலைகள் உடனே மாறாவிட்டாலும், தேவன் நிச்சயம் உன்னைத் தாங்குவார்.

? இன்றைய சிந்தனைக்கு :

என்ன நேர்ந்தாலும், மனக்குழப்பமடையாமல், தேவனுக்குள் திடமாக ஸ்திரமாக நிற்க என்ன செய்யவேண்டும்?


⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – சகோதரி சாந்தி பொன்னு

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

8 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *