? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 3:14-24

அவன் உன்னை ஆண்டுகொள்வான்!

…உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டுகொள்வான் என்றார். ஆதியாகமம் 3:16

ஒரு காலத்திலே ஆண்கள் நன்றாகப் படித்து, வேலைக்குப்போய் சம்பாதிக்கிறவர்களாகவும், பெண்கள் அதிகம் படிக்காமல் பொதுவாக வீட்டில் இருந்து குழந்தைகளை, குடும்பத்தைப் பராமரிக்கிறவளாகவும் இருந்ததுண்டு. ஆனால் இன்று பெண்களும் ஆண்களுக்குச் சரிக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் பணியாற்றுவதைக்  காண்கிறோம். இது தவறல்ல; ஆனால், சில மனைவிமாருக்கு, புருஷனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற தேவ கட்டளையைக் கடைப்பிடிப்பது சங்கடமாகிவருகிறது.

ஏவாளை உருவாக்கிய தேவன், அவளை ஆதாமிடத்தில் கொண்டுவந்தபோது, இவள்  என் எலும்பில் எலும்பும் என் மாம்சத்தில் மாம்சமும் என்று அவளை ஆதாம் ஏற்றுக்கொண்டான். ஆனால் ஆதாமை விட்டுவிலகி, தோட்டத்துக்குள் தனிமையாகச் சென்ற ஏவாள், பிசாசின் தந்திரங்களுக்குள் விழுந்து பாவம் செய்தாள். அதன்பின்னர் தேவன் இதைக் குறித்து வினாவியபோது, ஆதாம் ஏவாளைச் சாட்டினான். ஏவாளோ சர்ப்பத்தைச் சாட்டினாள். இப்போது தேவன் ஒவ்வொருவருக்கும் தண்டனையைக் குறிப்பிட்டுச் சொல்லு கிறார். அதில் ஸ்திரீயானவளுக்குச் சொல்லும்போதே, தேவன், “உன் புருஷன்  உன்னை ஆண்டுகொள்வான்” என்று சொல்வதைக் காண்கிறோம். 

ஏவாளை உருவாக்கி அவளை ஆதாமுக்குத் துணையாகத் தேவன் கொண்டுவந்து  நிறுத்தினார். அந்நேரத்தில் தேவன் அவன் உன்னை ஆண்டுகொள்வான் என எதுவுமே  சொல்லவில்லை. ஆனால் பாவத்தின் விளைவாகவே தேவன் இதைச் சொல்லுகிறார்.  பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பெண்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டனர். சகலத்திலும்  ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆண்கள் பெண்களை ஆண்டுவந்தனர்  எனலாம். ஆனால் கிறிஸ்து வந்தபின்னர் இந்நிலை முற்றிலும் மாறுபட்டது. இயேசு  பெண்களுக்கும் உரிமை கொடுத்தார். அதுமட்டுமல்ல அதன் பின்னர்தான் புருஷன்  மனைவிக்குத் தலையாய் இருக்கிறான் என்று பவுல் எழுதினார். தலையாய் இருப்பதென்பது, ஆண்டுகொள்வதல்ல; அது ஒரு பொறுப்பைக் குறிக்கிறது. அதாவது  கிறிஸ்து புருஷனுக்குத் தலையாயிருக்கிறார். புருஷன் மனைவிக்குத் தலையாயிருக் கிறான். புருஷன் ஸ்திரீயை ஆண்டுகொள்வான் என்றதான சாபத்தை கிறிஸ்து  முறியடித்து, புருஷன் ஸ்திரீக்குத் தலையாயிருக்கிறான் என்ற நிலையை உருவாக்கினார். இதன்நிமித்தம் ஸ்திரீயானவள் புருஷனுக்குக் கீழ்ப்படிந்திருத்தலும், புருஷன்  ஸ்திரீயினிடத்தில் அன்பாயிருத்தலும் ஆரம்பிக்கிறது. கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். எபேசியர் 5:23

? இன்றைய சிந்தனைக்கு:   

பாவத்தால் பாதிக்கப்பட்ட மனிதஉறவைக் கிறிஸ்து மீண்டும்  சரிப்படுத்தினார் என்பதை விசுவாசிக்கின்ற நான், அந்த உறவையும், கிறிஸ்துவுடனான உறவையும் கனப்படுத்துகிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin