செப்டெம்பர் 14 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எசே 4:13,14

உறுதியான தீர்மானம்

தானியேல் …தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு… தானியேல் 1:8

“இனி தங்கை தன் பொறுப்பு என்று தீர்மானமாகக் கூறிவிட்டு, வெளிநாடு போனான் என் மகன். ஆனால் அவனோ, தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்து, சுகபோகமாக வாழுகிறான். நம்மைக் கவனிப்பதே இல்லை.” இப்படியாக ஒரு விதவைத் தாய் கண்ணீர் விட்டார். தீர்மானங்கள் எடுப்பது வெகு இலகு. ஆனால் அதைச் செயற்படுத்தும்போதுதான் நமது மனமும் மனஉறுதியும் வெளிப்படுகிறது.

மேற்காணும் வசனத்திற்கு “தானியேல் தன் உள்ளத்தில் உறுதியாக தீர்மானம்பண்ணிக்கொண்டு” என்றும் ஒரு மொழிபெயர்ப்பு உண்டு. ஒன்று, தீட்டுப்படாமல் தன்னைக் காத்துக்கொள்ள தானியேல் தீர்மானம் செய்தது ஏதோ தற்செயலாகநிகழ்ந்த காரியமல்ல; அவருக்குள் அந்த எண்ணம் எப்பொழுதும் இருந்திருக்க வேண்டும். அடுத்தது, சூழ்நிலையோ அழுத்தங்களோ தன் உறுதியைத் தளரப் பண்ணக்கூடாது என்பதிலும் மிக உறுதியாயிருந்தார். இதுதான் “உறுதியான தீர்மானம்” என்பது. தீர்மானம் சரியானது என்பது மாத்திரமல்ல, சூழ்நிலைக்கும் அப்பால் நின்று அதைச் செயற்படுத்தவேண்டும். அப்படியான உறுதி தானியேலிடம் இருந்ததால் தேவ ஒத்தாசை அவருக்குக் கிடைத்தது.

நாமும் பல தீர்மானங்கள் எடுக்கிறோம். ஆனால் எவ்வளவுதூரம் அவற்றில் உறுதியாய் இருக்கிறோம்? உணர்ச்சி மேலீட்டால் செய்யப்படுகின்ற தீர்மானம் நிலைத்து நிற்பதில்லை. தீர்மானம் எடுக்கும்போது தெளிவுடன் கூடிய சரியான தெரிவு வேண்டும். தெரிவு சரியாய் இல்லாவிட்டால் தீர்மானம்பண்ணி என்ன பலன்? பின்னர் அதிலே உறுதியாய் நிற்பது எப்படி? என்ன நேர்ந்தாலும் தன் வாழ்வு தேவனுக்குத்தான் என்று தானியேல் ஒரு தெரிவை வைத்திருந்தார். அத் தெரிவில் அவர் தீர்மானமாயிருந்தார். அந்தத் தீர்மானத்தை செயற்படுத்துவதிலும் அவர் உறுதியாய் இருந்தார்.

தேவபிள்ளையே, வாழ்க்கை என்பது விளையாட்டல்ல. அது தேவன் தந்த ஈவு. அவருக்காக வாழ, அவருக்காக சேவை செய்ய, அவரை மாத்திரமே கனப்படுத்தவும் ஆராதிக்கவும் இந்த வாழ்வு நமக்கு அருளப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சித்தம், வழிநடத்துதல் வேண்டும் என்று நாம் விரும்புவோம். பின்னர் சோதனை நெருக்கங்கள் வரும் போது ஏன் தடுமாறுகிறோம்? மனதில் உறுதி இல்லை. திட்டவட்டமான ஒழுங்கான வாழ்வு இல்லை. பிறர் சொல்லுக்கும், நெருக்கமான சூழ்நிலைக்கும் நாம் இலகுவில் அடிமைகளாகிவிடுகிறோம். அடிப்படையில் நமது தெரிவு சரியில்லை என்பதுதான் அதன் அர்த்தம். நாம் யாரைச் சேவிக்கப்போகிறோம்? கடவுளையா? உலகத்தையா? கடவுளை என்றால் அதில் தீர்மானமாகவும், அதனை உறுதியாக செயற்படுத்தவும் நம்மை அர்ப்பணிப்போமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு: 

இதுவரை என் வாழ்வில் நான் விழுந்துபோன சந்தர்ப்பங்களுக்கான காரணங்களை நினைத்துப்பார்த்து சரிப்படுத்துவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

2 thoughts on “செப்டெம்பர் 14 வியாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin