செப்டெம்பர் 13 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தானி 1:5-8 மத் 6:25-26

உணவில் ஒரு கட்டுப்பாடு

தானியேல் …தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு…தானியேல் 1:8

மனிதனுடைய ஆளுமையைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் உணவுப் பழக்கம் மிக முக்கியம் என்று ஒரு மனோவைத்தியர் சொன்னார். ஒருவன் தனது பாலியல் உணர்வில் ஒழுக்கமாகவும் சிறந்தும் விளங்க உணவுப் பழக்கம் முக்கியம் என்று ஒரு புத்தகத்தில் வாசித்தேன். தேவன், தாம் சிருஷ்டித்த மனிதனிடம் ஏதேன் தோட்டத்திலுள்ளதைப் புசித்து, சுகமாய் இருக்கும்படிக்கு சொன்னார். ஆம், உயிர்வாழ உணவுஅவசியம். ஆனால் இன்று பல வியாதிகளுக்கு இந்த உணவே காரணமாயிருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. ஆக, உணவுப் பழக்கத்தில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு மிக முக்கியம். கடவுள் தந்த உணவை நன்றாய் சாப்பிட்டு சந்தோஷமாயிருந்தாலென்ன என்றார் ஒருவர். அதையே கட்டுப்பாட்டோடு உண்டு அவர் தந்த சரீரத்தை சரியாகப் பேணுவதே சிறந்தது என்றார் மற்றொருவர். இவர்களிலே நாம் யார்?

தான் உண்ணும் போஜனத்தையும் பானத்தையும் இந்த வாலிபர்களுக்கும் கொடுக்கும்படி ராஜா பிரதானிக்குக் கட்டளையிட்டான். உண்மையின்படி ராஜாவை மெச்சவேண்டும், ராஜ போஜனத்தை சாதாரண மனிதருக்குக் கொடுக்கும்படி ஒரு ராஜாகூறுவாரா? தானியேலோ அந்த உணவை உண்பதில்லை என்று மனதில் உறுதிகொண்டதேன்? ஒரு சாப்பாட்டிற்காக தானியேல் ஏன் இப்படி நடந்துகொள்ளவேண் டும்? அந்நிய தெய்வத்துடன் சம்மந்தப்பட்டபெயர் கொடுக்கப்பட்டபோதும், விக்கிரகஆராதனைக்காரராகிய கல்தேயரின் பாஷையைக் கற்றுக்கொடுத்தபோதும் மறுப்புதெரிவிக்காத தானியேல், ராஜ உணவு கிடைத்தபோது அதைத் தொடாமல் விட்டதுஎன்ன? இதற்கு பல காரணங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த உணவு தேவனுடைய பிரமாணங்களுக்கு மாறுபட்டதாக இருந்திருக்கலாம் (லேவி.11). இந்த உணவு அந்நியதெய்வங்களுக்குப் படைக்கப்படுகிறதாக இருந்திருக்கலாம். அல்லது, இந்த உணவை பெற்றுக்கொள்வது ராஜாவின் பரிசுகளை ஏற்றுக்கொள்வதுபோல இருக்குமென்று தானியேல் நினைத்திருக்கலாம். இவற்றிற்கும் மேலாக, ராஜ உணவினால் அல்ல, தேவனுக்கும் அவரது பிரமாணங்களுக்கும் கீழ்ப்படிவதினாலே சிறப்பாக உயிர்வாழ முடியும் என்ற வைராக்கியம் தானியேலுக்கும் நண்பர்களுக்கும் இருந்திருக்கலாம்.

உணவு நமக்கு முக்கியம். ஆனால், அதை நமக்குத் தந்த தேவனிலும் பார்க்க அது முக்கியமல்ல. அவருக்குக் கீழ்ப்படியும்படி உண்ணாமல் இருக்க நேர்ந்தாலும் கீழ்ப்படிவே முக்கியம் என்று நம்மால் கூறமுடியுமா? இன்று எங்கும் உணவு விடுதிகள். சாப்பிடவே புறப்படுவோம்; பின்பு, வியாதியும் கூடவே வரும். உணவுக்கூடாகவும் நம்மை தேவனிடமிருந்து பிரித்துப்போட பிசாசு வகைபார்ப்பான். எச்சரிக்கை!

💫 இன்றைய சிந்தனைக்கு:  

உணவை உணவாகப் பயன்படுத்தி, சரீர ஆரோக்கியத்தைப் பேணுவதைத் தவிர, கெடுத்துப்போடாதிருக்க என்ன செய்யவேண்டும்?

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “செப்டெம்பர் 13 புதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin