📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 15:22-27

கசப்பு மதுரமாகும்

..மாராவின் தண்ணீர்; கசப்பாயிருத்ததினால், அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது… யாத்.15:23

இஸ்ரவேல் மக்களின் வனாந்தரப் பயணமானது பலவிதங்களிலும் இன்றைய நமது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒத்ததாகவே இருக்கிறது. அவர்கள் இந்த வனாந்தரப் பயணத்தில் மூன்று நாட்களாக குடிக்கத் தண்;ணீர் இன்றி கஷ்டப்பட்டார்கள். மாரா என்ற இடத்திற்கு வந்துசேர்ந்தபோது, அங்கே தண்ணீர் இருந்தது; ஆனால் அது குடிக்கக் கூடாதபடிக்கு கசப்பாக இருந்தது. அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். மோசே என்ன செய்யவார்? கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். கர்த்தர், மோசேயிடம் ஒரு மரத்தைக் காண்பித்து, அதை வெட்டி, தண்ணீரிலே போடும்படி கூறினார். மோசே அப்படியே செய்தபோது தண்ணீரின் கசப்பு மாறி, அது தித்திப்பாயிற்று. அவர்கள் தண்ணீரைப் பருகி தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டார்கள். தமது மக்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்பதைக் கர்த்தர் அறியாதிருந்தாரா? அப்படி யல்ல! அவர்கள் கண்ட மாராவின் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதும் கர்த்தருக்குத் தெரியாதா? அப்படியும் அல்ல! தங்களை விடுவித்த கர்த்தர் தங்களைக் காக்கவும் போஷிக்கவும் தாகம்தீர்க்கவும் வல்லவர் என்பதை அந்த மக்கள் உணருகிறார்களோ என்று அவர்களுக்கு நேரிட்ட சோதனைதான் இது என்றால் மிகையாகாது. என்றாலும் கர்த்தர் ஒரு மரத்தைக் காட்ட, மோசே அதைத் தண்ணீரில் போட அந்தத் தண்ணீர் மதுரமாயிற்று. ஒரு விடயத்தைக் கவனிக்கவேண்டும். சற்று தூரத்தில் நல்ல நீரூற்றுகள் உள்ள ஏலிம் இருக்கிறது. ஆனால் இவர்களோ இந்த இடத்திலே தவித்து நிற்கிறார்கள். கிடைத்த தண்ணீரும் கசப்பாக இருந்ததால் முறுமுறுக்கிறார்கள். பாதகமான சூழ்நிலைகளில் முறுமுறுப்பது இலகுவான காரியம்; கர்த்தரை நம்புவதோநமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. என்றாலும் கர்த்தர் இங்கே கசப்பை மதுரமாகமாற்ற ஒரு மரத்தைக் காண்பிக்கிறார். விசுவாசத்தோடே அந்த மரத்தைத் தண்ணீரில் போட்டபோது, கசப்பு மதுரமாகியது.

நகோமி, தன் கசப்பான அனுபவங்களினிமித்தம் தன் பெயரைக்கூட “கசப்பு” என்ற அர்த்தம்கொண்ட “மாராள்” என்று அழைத்தாள். கர்த்தரோ, அவளது மருமகள் மூலம் ஒரு வாரிசைக் கொடுத்து, அவளது கசப்பை இனிப்பாக மாற்றினார். அந்த வம்சத்திலே தான் இயேசு வந்து பிறந்தார். வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு நிச்சயம் தாகம் எடுக்கும், கசப்புகளை சந்திக்க நேரிடும். சோர்வுகள் முறுமுறுப்புகள் உண்டாகும். ஆனாலும், பாவத்தால் கசந்துபோன நமது வாழ்வை மதுரமாக்க ஒரு மரம் உண்டு. அதுவே நமது ஆண்டவர் தமது ஜீவனைக்கொடுத்த சிலுவை மரம். கசப்பு நிறைந்த வாழ்விலே அந்த சிலுவை மரம், அதில் நிறைவேற்றப்பட்ட மீட்பு, நமது வாழ்வை முற்றிலும் மதுரமாக மாற்றவல்லது. அதில் தன்னைக் கொடுத்த அவரை விசுவாசித்து,நமது வாழ்வுக்குள் அவரை நாமேதானே அழைக்கவேண்டுமே!

💫 இன்றைய சிந்தனைக்கு:

   என் வாழ்வில் கசப்பான அனுபவங்கள் வந்தபோது இதுவரை நான் என்ன செய்தேன்? இனி நான் என்ன செய்வேன்?

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “ஒக்டோபர் 9 ஞாயிறு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin