? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 23:23-28

சுத்திகரிக்கப்பட்ட பாத்திரம்

பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத்தேயு 23:26

ஒரு வீட்டின் வரவேற்பு அறையிலே மிகவும் கவர்ச்சியான மிக விலையுயர்ந்த ஒருபூச்சாடியில் பூக்கள் வைக்கப்பட்டிருந்தது. ஒருநாள் அந்த வீட்டுப் பணிப்பெண் பூக்களை அகற்றி புதிய பூக்களை வைப்பதற்காகச் சென்றபோது, பூச்சாடிக்குள்ளிருந்து துர்நாற்றம் வீசியது. அவள் பூச்சாடிக்குள் பார்த்தபோது. அதற்குள் அழுக்கு நிறைந்து காணப்பட்டது. அதுபோல நாம் வெளியரங்கமாக அதிக தாலந்து படைத்தவர்களாக, ஊழியம் செய்கிறவர்களாக, மற்றவர்களுக்கு முன்பாக நல்லவர்களாகக் காணப்பட்டாலுங்கூட, நமது உள்ளான வாழ்வு எந்தளவு தூய்மையாக இருக்கிறது என்பதை அடிக்கடி தற்பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது மிக அவசியம்.

இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் யூதருக்குள் வேதபாரகர், பரிசேயர் என்ற இரு கூட்டத்தாரும் மத காரியங்களிலும், நியாயப்பிரமாண விடயங்களிலும் வைராக்கியமாக இருந்தனர். இவர்கள் தாங்களே சட்டப் புத்தகம்போல நடந்துகொண்டு, மக்களையும் கடினமாக நடத்திக்கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே” என்கிறார். அவர்கள் தங்கள் வெளிவாழ்விலே பக்தியும் பரிசுத்தமும் உள்ளவர்களாகக் காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய உள்ளான வாழ்வோ மிகவும் அழுக்காயிருந்தது. ஆண்டவருடைய வார்த்தையைப் பாருங்கள், “வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு” என்கிறார். உட்புறம் சுத்தமாகும்போது, வெளிப்புற வாழ்வு தானாகவே சுத்தமாகும். அதைவிடுத்து, சுத்தமானவர்கள் என்று சொல்லிக்கொண்டு மாய்மாலமான வாழ்வு வாழுவதைக் கர்த்தர் அருவருக்கிறார்.

சுத்திகரிக்கப்பட்ட ஒருவருடைய வாழ்வுதான் கர்த்தருக்கு உபயோகமுள்ள பாத்திரமாக விளங்கமுடியும். “ஒருவன் …தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்” (2தீமோ.2:20,21) என்கிறார் பவுல்.பாத்திரங்கள் எவ்வளவுதான் கவர்ச்சியானதாக விலையுயர்ந்ததாக இருந்தாலும், அது உள்ளும் புறமும் சுத்தமானதாக இருப்பது அவசியமல்லவா! எனது நிறம், தோற்றம், தராதரம் இவை கர்த்தருக்கு முன்பாக முக்கியமல்ல; நமது உள்ளான வாழ்வைக் கர்த்தருக்கு மறைக்கமுடியாது. அவர் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கிறவர். ஆகவே, நல்ல கிறிஸ்துவன் என்ற வேஷத்தை விடுத்து, உள்ளும் புறமும் சரியான கிறிஸ்தவனாக வாழ நம்மைச் சுத்திகரித்து ஏற்றுக்கொள்ளும்படி ஆண்டவருடைய கரத்தின் பாத்திரங்களாக நம்மை ஒப்புவிப்போம். தமக்கேற்றபடி அவர் நம்மை ஆக்குவாராக.

? இன்றைய சிந்தனைக்கு:  

கர்த்தர் விரும்பும் சுத்த இருதயம் என்பது என்ன? அது என்னிடம் உண்டா? கர்த்தருக்கு உகந்த பாத்திரமாக அவரே என்னை வனைந்துகொள்ள இன்றே என்னை ஒப்புவிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *