ஞ📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாக்கோபு 3:1-13

அழிவும் ஆசீர்வாதமும்

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்… அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் நீதிமொழிகள் 18:21

ஒரு தகப்பன், திருமண வயதை அடைந்த தனது மூன்று பெண் பிள்ளைகளிடமும், “வீட்டிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிற இந்தத் தரித்திரங்கள் எங்கேயாவது போய்த்தொலைந்தால் நன்றாயிருக்கும்; இவர்களை யார்தான் கூட்டிக்கொண்டு ஓடுவான்” என்று அடிக்கடி திட்டுவாராம். இதனால் நம்பிக்கையிழந்து விரக்தியடைந்த அந்த மூன்று பிள்ளைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்கள். இதன் விளைவாக தந்தையின் வாழ்க்கையும் சீரழிந்தது என வெகு நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகை செய்தியை வாசிக்க நேர்ந்தது.

ஒரு மருத்துவ கல்லூரியின் பேராசிரியர், தனது இளமைப் பருவத்தில் பொருளாதார நெருக்கடியிலும் கஷ்டத்திலும் இருந்தார். அவரது பெற்றோர் தேவபக்தி உள்ளவர்கள். ஒருநாள் அவரது தகப்பனார் திடீரென வியாதியுற்று படுக்கையானார். அந்தச் சந்தர்ப்பத்திலும் தகப்பன் மகனிடத்தில் நம்பிக்கையின் வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருப்பார். மரணநேரம் நெருங்கியபோது, “மகனே நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன்.உனக்காக தினமும் ஜெபிக்கின்றேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். ஒரு நல்ல எதிர்காலம் உனக்கு உண்டாகும். உன் தாயைக் கவனித்துக்கொள்” என்று கூறி இறந்துபோனார். தகப்பன் சொன்ன வார்த்தைகள் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. கஷ்டப்பட்டு படித்த அவர், ஒரு மருத்துவ பேராசியரானார்.

இந்த இரண்டு சம்பவங்களிலும், ஒருவரின் வார்த்தைகள் பிள்ளைகளை அழித்தது. மற்றவரின் வார்த்தைகள் வாழ்வை உயர்த்தியது. நமது வாயின் வார்த்தைகள் மிக முக்கியம். அவை அடுத்தவரை வாழவும் வைக்கும்; அல்லது வேதனைப்படுத்தி சாகடிக்கவும் செய்யும். இதில் எப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பேசுகிறோம். இரக்கமற்ற வார்த்தைகள் பிறர் இருதயத்தை ஊடுருவிச்சென்று, உறவுகளை உடைத்து, எதிர்காலத்தையும் நாசமாக்கிவிடலாம். இப்படியாக நடந்துகொள்கிறவர்கள் தங்கள் வாழ்வுக்கும் அழிவையே தேடிக்கொள்வார்கள். ஆனால் பண்புள்ள வார்த்தைகளைக் பேசும்போது, பேசுகிறவர்களுக்கும் அதைக் கேட்கிறவர்களுக்கும் அது ஆசீர்வாதத்தையே கொண்டுவருகிறது.

பண்புடன் பேசுவதின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டால் நன்மையும் ஆசீர்வாதமுமான பலாபலன்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆம், மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது. அதன் திறவுகோல் நமது கையில்தான் இருக்கிறது. ஆகவே நாம் பேசும் வார்த்தைகள் அன்பிலும் ஆசீர்வாதத்திலும் நிறைந்த வார்த்தைகளாக இருக்க கிறிஸ்து இயேசுதாமே நமக்கு அருள்செய்வாராக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

   பிறர் வார்த்தைகளால் நான் என்ன தாக்கத்தைப் பெற்றிருக்கிறேன் என்பதை உணர்ந்து, எனது வாயின் வார்த்தைகளைக் கர்த்தருக்குள் காத்துக்கொள்வேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “ஒக்டோபர் 30 ஞாயிறு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin