ஆகஸ்ட் 28 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை ,

1இராஜா 12:28-33

தொடரும் பழைய பாவம்

இந்தக் காரியம் பாவமாயிற்று.1ராஜா.12:30

நமது இரட்சிப்புக்கு முன்பு நம்மைப் பிடித்திருந்த பாவங்கள், இலகுவாக நம்மை விட்டு ஓடி விடுவதில்லை என்பதை நமது அனுபவத்தில் கண்டிருக்கலாம். எதை விட்டுவிட எண்ணுகிறோமோ அதுவே நம்மைத் தொடர்ந்து பிடிக்கும். ஆனால், நம்மை மீட்டவர் நாம் சரிந்துபோக விடமாட்டார்; ஆனால், நாம் அவரைப் பற்றிக்கொண்டு, கீழ்ப்படிந்திருக்கவேண்டுமே!

இஸ்ரவேலருக்கு முக்கியமாக மூன்று பண்டிகைகள் உண்டு. அவற்றைக்குறித்த கட்டளைகளை கர்த்தர் மோசே மூலம் கொடுத்திருந்தார். முதலாம் மாதம் 14ம் தேதிஅந்திநேரத்தில் கர்த்தரின் பஸ்கா பண்டிகை; பின்னர் 15ம் தேதி கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகை. அது ஏழு நாட்கள். அறுப்பின் பின்னர் அசைவாட்டும் போஜனபலி 50ம் நாள். ஏழாம் மாதம் 1ம் திகதி எக்காள சத்தத்தால் ஞாபகப் பண்டிகை. அதே ஏழாம் மாதம் 10ம்; தேதி பாவநிவிர்த்தி செய்கின்ற தகனபலி. அதே ஏழாம் மாதம் 15ம் தேதி முதல் ஏழு நாட்கள் கூடாரப்பண்டிகை. 8ம் நாள் சபைகூடும் நாள் (லேவி.23ம் அதிகாரம்). சகலமும் முடிய, சாலொமோன், ஏழாம் மாதம் 23ம் தேதியில் தங்கள் கூடாரங்களுக்குப் போகும்படி ஜனங்களை அனுப்பிவிட்டான் (2நாளா.7:10). இப்படியிருக்க, யெரொபெயாம் செய்தது என்ன? பண்டிகைகளுக்கென்று ஜனங்கள் எப்பிராயீமிலிருந்து எருசலேமிலுள்ள ஆலயத்துக்குப் பலிசெலுத்தப்போனால், அவர்களின் இருதயம் யூதா பக்கம் திரும்பிவிடும், பின்னர் அவர்கள் தன்னைக் கொன்றுபோடுவார்கள் என்று பயந்து, யோசனைபண்ணி, தன் சுயபுத்தியில் பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனத்தாரிடம்: “இதோ, எகிப்திலிருந்து உங்களை வரப்பண்ணின உங்கள் தேவர்கள்” என்று சொல்லி, பெத்தேலிலும் தாணிலும் அதைஸ்தாபித்தான். அத்துடன் கோவிலைக் கட்டி, லேவி புத்திரர் அல்லாத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். ஏழாம் மாதத்துடன் பண்டிகைகள் முடியவேண்டியிருக்க, இவனோ தன் மனதிலே தானே நியமித்துக்கொண்ட எட்டாம் மாதம் 15ம் தேதியிலே பண்டிகை கொண்டாடி, பலியிட்டுத் தூபங்காட்டினான்.

பழைய பாவம் தொடருகிறதா? சீனாய் அடிவாரத்திலே ஒரு பொன் கன்றுக்குட்டி;இங்கேயும் அதே கன்றுக்குட்டி! சவுல் பலி செலுத்த அவசரப்பட்டு ராஜ்யத்தைஇழந்தான்; இங்கேயும் அதே கீழ்ப்படியாமை யொரொபெயாமைத் துரத்துகிறது. நாம் மீட்கப்பட்ட கிருபையின் நாட்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. தினமும் அதை நினைந்து கர்த்தரைத் துதிக்கவேண்டும். நமது பழைய பாவத்தை கர்த்தர் நினையாதிருந்தாலும், சத்துரு அதை நினைவுபடுத்தி, சமயம்பார்த்து அதே பாவத்திலேதானே நம்மை விழுத்திப்போட வகைபார்ப்பான். பழையன எதுவும் நம்மைத் தொடர்ந்து பிடிக்காதபடி தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் எச்சரிக்கையாயிருப்போம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

இன்று என் மனதைக் குழப்பும் பழைய நினைவுகள் என்ன? என் சிந்தனைகளை அப்படியே தேவ பாதத்தில் கொட்டிவிடுவேனாக.

One thought on “ஆகஸ்ட் 28 திங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin