ஆகஸ்ட் 21 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1இராஜா 10:23-29

வீழ்ச்சியின் ஆரம்பம்

இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப் போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை. நெகேமியா 13:26

நெகேமியா தொடர்ந்து எழுதுகிறார்: “அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயி ருந்தான். தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் “பாவஞ்செய்யப்பண்ணினார்களே.” யாருக்கும் இந்நிலைமை நேரிடக்கூடாது! உலகரீதியில் நாம் ராஜாக்களாக அதிபதிகளாக இல்லாவிட்டாலும், “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (வெளி.1:6). இந்த சத்திய வார்த்தையை நாம் விசுவாசிப்பது மெய்யானால், ஒருவிசை சாலொமோனின் இடத்தில் நம்மை நிறுத்தி வைத்து ஆவிக்குரிய ரீதியில் தியானிப்போமாக.

“நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்று தேவன் கேட்க, “உமது ஜனத்தை விசாரிக்கவும், நன்மை தீமையை வகையறுக்கவும் ஞானமுள்ள இருதயம் வேண்டும்” என்று சாலொமோன் பதிலளிக்க, அது கர்த்தருக்கு உகந்ததாயிருந்தது. அவர் சாலொமோனுக்கு ஞானத்தையும், புத்தியையும், மனேவிருத்தியையும் கொடுத்தார் என்று வாசிக்கிறோம். அப்படியே கர்த்தருக்கென்று சாலொமோன் கட்டிய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட சாலொமோன் பாவத்தின் பிடியில் அகப்பட்டது என்ன?

முதலாவது, சாலொமோனின் விழுகை, 1ராஜா.10:25 இலேயே ஆரம்பித்துவிட்டது. அவன் கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும்கூட கர்த்தர் அவனுக்குக் கொடுத்திருக்க, அவன் மேலதிக செழிப்பை நாடினான். அப்போதே அவன் சறுக்க ஆரம்பித்து விட்டிருந்தான். “சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும்போல நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்… என்று ஆரம்பித்த மோசே, தனது கடைசி பிரசங்க வார்த்தையிலே, “அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளை தனக்குச் சம்பாதிக்கும்படி ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்” (உபா.17:14-16) என்று கூறினார். ஆனால் சாலொமோன், தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; “தனக்கு குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்” இவனது இந்த விழுகைக்கு யார் காரணம்? இன்று, சாலொமோனைப்போல அல்லாமல், இயேசுவின் இரத்தத்தினாலேதானே நமக்கு ராஜரீக கிருபை கிடைத்தது. அப்படியிருக்க, எந்தஇடத்தில் கர்த்தருடைய வார்த்தைக்கு மாறாக நடந்து, வழுவிப்போகும் அபாயத்தில் இருக்கிறோம் என்பதை சிந்திப்போம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

தேவனுடைய பிள்ளை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இயேசு நமக்கு ஒரு மாதிரியை வைத்துப்போயுள்ளார். அதில் எங்கே நாம் சறுக்கிப்போயிருக்கிறோம்?

📘 அனுதினமும் தேவனுடன்.

16 thoughts on “ஆகஸ்ட் 21 திங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin