📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 2:8-11
நாம் சகோதரர்கள்
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. எபிரெயர் 13:1
தனது பிள்ளைகள் சண்டைசெய்யும்போது, அவர்களுடைய தாயார், ‘இது அன்பு இல்லாத வாழ்க்கை, பண்பற்ற நடத்தை, கண்களால் கண்கின்ற உங்கள் சொந்த சகோதரரிடத்தில் அன்புகூராத நீங்கள் காணாத தேவனிடம் எப்படி அன்புகூருவீர்கள்” என்ற கடிந்துரைப்பாராம். இந்த அறிவுரையை இன்னமும் நினைவில் கொண்டு வாழுகிறேன் என்று அந்த தாயின் ஒரு மகன் பகிர்ந்துகொண்டார்.
சகோதர சிநேகம் உள்ளத்தில் நிலைத்திருக்கவேண்டுமென்றால் வெறுமனே அன்பு மாத்திரம் போதாது, உள்ளத்தில் தாழ்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவசியம். ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துவினுடைய மந்தை மேய்ப்பருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானபோது, அது பெருகி பகையாக மாறாத படிக்கு, ஆபிராம் கூறியது, ‘எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்” என்பதேயாகும். ஆபிராம் கூறிய இந்த வார்த்தைகள் சகோதர சிநேகத்தை வலியுறுத்தியது.
யோவான் தனது நிருபத்திலும் பல இடங்களில் சகோதர சிநேகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். சகோதரனை பகைகின்றவன் இருளில் இருக்கிறான் என்கிறார் யோவான். காயீன் ஆபேலின்மீது கொண்ட பகையினால் இருளின் பிள்ளையாக, கண்கள் குரடாகினபடியால் தான் செய்வதையே உணராதவனாக (1யோவா. 2:11) சொந்தத் தம்பியையே கொன்றுபோட்டான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன், இடறிவிழாமல் ஒளியில் நடக்கிறான். நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டு மென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருகிறது (1யோவா.3:11). தன் சகோதரனைப் பகைகிறவன் மனுஷ கொலைபாதகன் மட்டுமல்ல, அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது (1யோவான் 3:15). மேலும். அன்புகூருகிறேனென்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைகிறவன் பொய்யன்.
இன்று நமது சகோதரர்கள் யார்? நமது தாய்க்குப் பிறந்த உடன்பிறப்புகள் மாத்திரமா? இல்லை, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரால் பாவமன்னிப்பை பெற்றுக் கொண்ட அனைவரும் நமது சகோதரரே. ஆகவே, நமது சகோதர உறவு எப்படிப்பட்டது? உள்ளொன்று வைத்து புறம்பொன்றாக நடக்கிறோமா? இல்லை, உண்மையான உள்ளன்புடன் நேசிக்கிறேனா? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரரிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கின்ற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்… (1யோவான் 4:21).
💫 இன்றைய சிந்தனைக்கு:
எல்லோரையும் நேசிக்கிறேன் என்பேனாகில் எனது செயல்கள் எப்படிப்பட்டவை? எனது நடத்தை எப்படிப்பட்டது?
📘 அனுதினமும் தேவனுடன்.