ஆகஸ்ட் 17 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :1நாளா 28:9-21

பொறுப்புமிக்க ராஜா

என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும், உற்சாக மனதோடும் சேவி. 1நாளாகமம் 28:9

சிலர் மரித்தபின்னர், அவர்கள் கடைசி நாட்களில் செய்த காரியங்கள், கூறிய விடயங்களையெல்லாம் நினைவுபடுத்தி, தான் மரிக்கப்போகிறேன் என்று அறிந்துதான் இப்படியெல்லாம் இவர் செய்தாரா என்று நாம் வியப்பதுண்டு. ஒரு நல்ல, ஆசீர்வாதமான, சாட்சியான மரணம் நேரிடுவது எவ்வளவு பாக்கியம்!

சகல தலைவர்கள், அதிபதிகள், பிரபுக்கள், பலசாலிகள் யாவரையும் கூடிவரச்செய்த தாவீது, “எழுந்திருந்து காலூன்றி நின்று” பேச ஆரம்பிக்கிறார். தன் முதுமையிலும் அவர் தன் பொறுப்பை மறக்கவில்லை. தேசத்தைச் சுதந்தரமாய் அனுபவிக்கவும், அடுத்த சந்ததிக்கு அதை சுதந்திரமாய் வைத்துப்போகவும் ஒரே வழி, கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே என்று மக்களுக்கு வலியுறுத்துகிறார் (வச.8). பின்பு சாலொமோனைப் பார்த்து, கர்த்தர் வெளித்தோற்றத்தை அல்ல, இருதயங்களை ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவராகையால், உத்தம இருதயத்தோடு அவரைச் சேவிக்கும்படி புத்திசொல்லுகிறார். பரிசுத்த ஸ்தலமாகிய ஆலயத்தைக் கட்டுவதற்கு கர்த்தர் சாலொமோனைத் தெரிந்துகொண்டதால் எச்சரிக்கையாய் இருக்கும்படி எச்சரிக்கிறார். மேலும், ஆலயத்தின் மாதிரியை விளங்கவைத்து,”இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது” என்றார் (வச.19). ஆலயம் கட்டுவதற்குத் தேவையான சகலத்தையும் தேடி, தன்னிடமிருந்த பொன் வெள்ளி அனைத்தையும் கொடுக்கிறார். மனப்பூர்வமாகக் கொடுக்கும் படி மக்களையும் உற்சாகப்படுத்துகிறார். அப்படியே மனப்பூர்வமாகக் கொடுத்ததற் காக மக்கள் சந்தோஷப்பட்டார்களாம், என்ன ஆச்சரியம்! இப்படிக் கொடுக்கிற திராணியைக் கர்த்தரே கொடுத்தார் என்று  கொடுத்தலின் பெருமையையும் கர்த்தருக்கே செலுத்துகிறார் தாவீது. தான் உத்தம இருதயத்தோடு அனைத்தையும் செய்ததுபோல,தன் மகனுக்கும் உத்தம இருதயத்தைக் கொடுக்கும்படி ஜெபிக்கிறார் ராஜாவும், பொறுப்புள்ள தகப்பனுமாகிய தாவீது.

“தாவீது ஒரு அற்புதமான மனுஷன். சகல ஆயத்தங்களையும் செய்து கொடுத்தார்.இனி அதை நிறைவேற்றவேண்டியது ஒன்றுதான் சாலொமோனின் பணி” இப்படியாக ஒருவர் தனது வேதாகமத்தில் 1நாளா. 28ம் அதிகாரத்தின்மேல் எழுதிவைத்திருக்கிறார். நாம் நமது பிள்ளைகளுக்கு எதை வைத்துப்போகப் போகிறோம்? நல்ல சுதந்தரத்தையா? அல்லது சண்டை சச்சரவுகளையா? உயிர் பிரியும் முன்பாக, பிள்ளைகளுக் குப் பாரத்தை வைத்துப்போகாமல், நல்ஆலோசனையையும், தேவைகள் சகலத்தையும் ஆயத்தம்செய்து கொடுக்க நம் ஒவ்வொருவரையும் தேவன்தாமே தமது ஆவியால் நிரப்புவாராக.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

ராஜா என்பதற்கும் மேலாக, தேவனுடைய ஒரு தாசனாக, உத்தமமான ஒரு மனுஷனாக நமக்கு மாதிரியாயிருக்கிற தாவீதைக் குறித்து எனது அபிப்பிராயம் என்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

6 thoughts on “ஆகஸ்ட் 17 வியாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin