ஆகஸ்ட் 10 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப்போஸ்தலர் 13:41-49

பணிக்கேற்ப உருவாக்குவார்!

…அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அப்.9:15

‘எப்படி இருந்தவன், இப்படி மாறினான்” என்று ஆச்சரியப்படத்தக்கதாக சிலருடைய வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றம் நம்மைத் திகைக்கவைக்கிறது. ஆனால் இந்த மாற்றம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருப்பது அவரவருடைய தெரிவில்தான் தங்கியுள்ளது. ஆனால். தேவன் ஒருவன்பேரில் ஒரு நோக்கம் வைத்திருப்பாராயின், அவன் எங்கே சென்றாலும், என்னதான் செய்தாலும், வேளை வரும்போது நிச்சயம் அந்த நபரைச் சந்தித்தே தீருவார். அந்த சமயத்தில்கூட கர்த்தரையும் அவர் அருளும் இரட்சிப்பையும் ஏற்றுக்கொள்வதும் அல்லது தட்டிவிடுவதும்கூட நமது தெரிவுதான். என்றாலும், கர்த்தர் யாவையும், நமது முடிவையும் அறிந்திருப்பவர். அவரது தெரிவில் இருப்பவனை அவர் பிடிப்பார். கர்த்தரின் தெரிவு மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது.

தமது பிள்ளைகளை துன்பப்படுத்தின யூதனாகிய சவுலை, புறவினத்தாருக்கு சுவிசேஷத்தை எடுத்துச்செல்லும் பாத்திரமாக மாற்றிய தேவனுடைய சர்வஞானத்தை என்ன சொல்ல!

எபிரேயனும், ரோம பிராஜாவுரிமை கொண்டவனும், கல்விமானும், புகழ்பெற்றவனும், செனகரிப் சங்கத்தின் இளைய அங்கத்தினனுமாகிய சவுல், யூதமத வைராக்கியம் கொண்ட ஒருவன். கிறிஸ்து இயேசுவில் கொண்ட விசுவாசத்தினிமித்தம் ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டபோது, இது அவசியந்தான் என்பதுபோல, பார்த்துக்கொண்டு நின்றவன். கிறிஸ்தவர்களைக் கட்டி இழுத்து வருவதற்காக அதிகாரபூர்வமாக அனுமதிபெற்று. தமஸ்குவுக்குத் தலைநிமிர்ந்து சென்றவன். இத்தனையும் நடக்கும் வரைக்கும் கர்த்தர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். வேளை வந்தது; தமஸ்குவுக்குப் போகும் வழியில் ஆண்டவர் சவுலை இடைமறித்தபோது, கதிகலங்கியவன், ‘நீர் யார்” என்றான். இந்த சவுலைத்தான் கர்த்தர், ‘புறஜாதிகளுக்கு இரட்சிப்பு” என்றதான தமது அநாதி சித்தத்தை நிறைவேற்றுகின்ற பாத்திரமாகத் தெரிந்தெடுத்திருந்தார். ‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்ற ஒரே வார்த்தையில் முகங்குப்புற விழுந்த சவுலை, இந்தப் பாடு நிறைந்த பாதையில் நடக்க கர்த்தர் பெலப்படுத்தினார்.

கர்த்தர், தாம் தெரிந்துகொண்டவர்களை, கிறிஸ்துவின் இரத்ததால் நீதிமான்களாக்கி, தமது அழைப்புக்கேற்ற பாத்திரங்களாக உருவாக்கி அனுப்புகிறார். புறவினத்தார் மத்தியில் ஒரு யூதன் சென்று சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது கடின காரியம். ஆனால் பவுலைக் கர்த்தர் அதற்கேற்ப உருவாக்கினார். இன்று நம்மிலும் கர்த்தர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்; அதைக் கடினம் என்று நாம் எண்ணவேண்டாம். அதற்கேற்ப அவர் நம்மை உருவாக்கி அனுப்புவார். அந்த உருவாக்குதலுக்கு நம்மை ஒப்புவித்தால் போதும்!

💫 இன்றைய சிந்தனைக்கு: 

எந்த இடத்திலாகிலும், என்ன நிலையிலாகிலும் கர்த்தர் என்னை நிறுத்துகிறார் என்றால் அவர் என்னை உருவாக்கியே நிறுத்துகிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியுமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

4,094 thoughts on “ஆகஸ்ட் 10 புதன்